மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி மசோதா நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் கழித்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு இன்று அமல்படுத்தியுள்ளது. கடந்த 2019 டிசம்பர் 11இல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு, குடியரசுத் தலைவர் மறுநாளே ஒப்புதல் அளித்தார்.
இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்தின் படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி அல்லது கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கலாம்.
அவர்கள் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்கு முன்பாக இங்கு வந்திருக்க வேண்டும். அவர்கள் குறைந்தது 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என குடியுரிமை சட்டத்திருத்தம் தெரிவித்தது.
இந்த சட்டத்திருத்தம் சிறும்பான்மையின மக்களுக்கு எதிரானது இல்லை என்றால் இஸ்லாமிய மக்களை ஏன் விலக்கிவைக்கிறது எனக்கூறிய எதிர்க்கட்சிகள், இந்த சட்டத்திருத்தத்தை சட்டவிரோதமானது என்றும் குற்றம் சாட்டின. அதேபோல் தமிழ்நாட்டிலும், இலங்கையில் இருந்து அகதிகளாக வரும் தமிழர்களை இந்த சட்டம் புறக்கணிக்கிறது என்று எதிர்ப்புகள் கடுமையாக பதிவு செய்யப்பட்டது.
இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக வடமாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரி மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதம் ஏற்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டது.
முன்னதாக, 2016 ஆம் ஆண்டே மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு எதிர்ப்பு எழுந்த நிலையில் பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு, இந்த சட்டத்திருத்தம் அனுப்பிவைக்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய அந்த குழுவின் தலைவராக பாஜக எம்.பி. சத்யபால் சிங் நியமிக்கப்பட்டிருந்தார். குழுவில் மொத்தம் 30 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த குழு 14 முறை கூடி பல்வேறு தரப்பினரைச் சந்தித்து கருத்துக்களை கேட்டது. 2017 ஆம் ஆண்டு சத்யபால் சிங் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதால், பாஜக எம்.பி. ராஜேந்திர அகர்வால் இந்த குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
அதில், நேபாளம், பூடான், இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டன. இக்குழு தனது அறிக்கையை 2019 ஆம் ஆண்டு அரசுக்கு அனுப்பி வைத்தது. பின் மீண்டும் மக்களவையில் 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும் கூட மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை.
பின்னர் 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், நீண்ட விவாதத்திற்குப் பிறகு குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் மசோதாவிற்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும் எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மாநிலங்களவையில் மசோதாவிற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும் எதிராக 105 பேரும் வாக்களித்தனர். தமிழ்நாட்டுக் கட்சிகளான அதிமுக, பாமக எம்.பி.க்கள், மாநிலங்களவையில் இந்த சட்டத்திருத்ததிற்கு ஆதரவாக வாக்களித்ததுதான் இந்த சட்டத்திருத்தம் நிறைவேற காரணமாக இருந்தது என திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
மசோதா மாநிலங்களவையில் வாக்கெடுப்பிற்கு வந்தபோது அதில், திமுக, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்), தேசியவாத காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், நாகா மக்கள் முன்னணி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவை ஆதரிக்கவில்லை. சிவசேனா வாக்களிக்காமல் புறக்கணித்திருந்தது.
சட்டம் நிறைவேறியதும், 2020ஆம் ஆண்டே இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தற்போது மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.
அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.க.வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள்!” என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பல்வேறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தினர். வடகிழக்கு டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உள்ளனர். உத்தரப் பிரதேசம் அஸ்ஸாம் போன்ற மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.