இந்தியா

மக்களவையில் இன்று தாக்கலாகிறது குடியுரிமை திருத்த மசோதா !

மக்களவையில் இன்று தாக்கலாகிறது குடியுரிமை திருத்த மசோதா !

jagadeesh

குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும், குடியுரிமை திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மக்களவையில் காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். இதையொட்டி, பாஜக உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அசாம் மாநிலம் கவுகாத்தியில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாணவர் சங்கத்தினர், தீப்பந்தங்களை ஏந்தி அணிவகுப்புகளை நடத்தினர். இதேபோல மாநிலத்தின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. சிவாசாகர் பகுதியில் நிர்வாணப் போராட்டம் நடத்தியவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

அசாம் மற்றும் அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. மணிப்பூர் தலைநகர் இம்பாலிலும் போராட்டங்கள் நடைபெற்றன. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் நாளை 12 மணி நேர பந்துக்கு, 16 அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில் குடியுரிமை மசோதா, நாட்டின் மதசார்பற்ற தன்மைக்கு எதிரானது என்பதால், நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்ப்போம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அதேநேரேத்தில் 545 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில், பாஜகவுக்கு 303 எம்.பி.க்கள் இருப்பதால், மசோதா எளிதாக நிறைவேறும் எனத் தெரிகிறது.