இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத், எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி சண்டிகர் விமான நிலையத்தில் பெண் காவலர் ஒருவர், தன்னை அறைந்ததாக கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டிருந்த கங்கனா, உள்துறை அமைச்சகத்திடமும் புகாரும் அளித்திருந்தார். நாடு முழுவதும் இச்சம்பவம் பரபரப்பான நிலையில், கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த அந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலரான குல்விந்தர் கவுர், உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கங்கனா அளித்த புகாரின் அடிப்படையில் பெண் காவலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கங்கனா முன்னொரு சமயத்தில் விவசாயிகள் கூட்டத்தில் விவசாயிகளை தரக்குறைவாக பேசியதில், அதிருப்தியடைந்திருந்த குல்விந்தர் கவுர், கங்கனாவை தாக்கியுள்ளார் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
குல்விந்தர் கவுரின் இந்த செயலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. மொஹாலியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சிவராஜ் சிங் பெயின்ஸ் பெண் காவலருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவித்திருந்தார். அதேபோல், பிரபல பாடகர் ஒருவர், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் காவலருக்கு தான் வேலை வாங்கிக் கொடுப்பதாக தெரிவித்திருந்தார்.
தவிர, விவசாயச் சங்கங்கள் பெண் காவலர் விவகாரத்தில் விசாரணை நியாயமான முறையில் நடைபெற வேண்டும் எனவும் வலியுறுத்தி அவருக்கு ஆதரவாக பேரணியும் நடத்தின. இதற்கும் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார், கங்கனா ரனாவத்.
இந்த நிலையில், நடிகையும் எம்பியுமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த பெண் காவலரான குல்விந்தர் கவுர், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சண்டீகர் விமான நிலையத்திலிருந்து பெங்களூருவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். என்றாலும், சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் இன்னும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மீது துறைரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.