எடியூரப்பா ட்விட்டர்
இந்தியா

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கர்நாடக Ex CM எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு CIDக்கு மாற்றம்!

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போச்சோ வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அம்மாநில டி.ஜி.பி. அலோக் மோகன் தெரிவித்துள்ளார்.

Prakash J

கர்நாடகவின் மூத்த பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா மீது, போக்சோ சட்டப்பிரிவு 8 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 352A ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தச் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பாலியல் குற்றச்சாட்டை எடியூரப்பா மறுத்துள்ளார். மேலும் மக்களவை தேர்தலுக்கு சில வாரங்கள் உள்ள நிலையில், தற்போது தன்மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தான், ஆறுதல் கூறி அனுப்பியதை, தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்டு வெளியிட்டு பொய் புகார் கொடுத்துள்ளதாக எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் அச்சிறுமியும் அவரது தாயும் உதவி கேட்டு என்னைச் சந்திக்க வந்தனர். அவர்கள் நிலையை அறிந்து சிட்டி கமிஷனர் தயனாந்தாவை போனில் அழைத்துப் பேசி உதவி செய்யும்படி கோரினேன். ஆனால் இப்போது எனக்கே எதிராக பேசுகிறார்கள். அச்சிறுமிக்கு ஏதோ உடல்நலக்கோளாறு இருப்பதாக அறிந்து, போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நானே அவர்களை அனுப்பிவைத்தேன். அவர்கள் மன உளைச்சலில் இருந்ததால் கொஞ்சம் பணம்கூட கொடுத்தேன். ஆனால் இப்போது இப்படி நடந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எடியூரப்பா மீதான போச்சோ வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கர்நாடகா டி.ஜி.பி. அலோக் மோகன் தகவல் தெரிவித்துள்ளார். POCSO 2012-ன் விதிகளின்படி, பெங்களூரு நகர சதாசிவநகர் காவல் நிலையத்தில் எடியூரப்பா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையைத் தொடர்வதற்காக, வழக்கின் ஆவணத்தை CID-யிடம் உடனடியாக ஒப்படைக்க கர்நாடகாவின் தலைமை இயக்குநர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.