இந்திய எல்லையில் அத்துமீறி பறந்த ஹெலிகாப்டரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமர் பயணித்ததாக தகவல் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று முன்தினம் பாகிஸ்தானுக்கு சொந்தமான வெள்ளைநிற ஹெலிகாப்டர் அத்துமீறி பறந்து சென்றது. இந்திய நிலைகளில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ஹெலிகாப்டர் பாகிஸ்தான் பகுதிக்கு திரும்பிச் சென்றது.
இந்த நிலையில், அந்த ஹெலிகாப்டரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர் ராஜா பரூக் பயணம் செய்ததாக தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பயணம் செய்யும் வெள்ளைநிற ஹெலிகாப்டரில் , தன்னுடைய அமைச்சர் ஒருவரின் சகோதரர் மறைவிற்காக, இரண்டு அமைச்சர்களுடன் சென்றதாக கூறியுள்ளார்.
ராணுவ ஹெலிகாப்டரில் பறக்கும்போதுதான் முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும், பயணிகள் ஹெலிகாப்டரில் சென்றால் தகவல் கூற அவசியமில்லை என ராஜா பரூக் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் எல்லையில் தான் தங்கள் ஹெலிகாப்டர் இருந்ததாகவும், இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.