காலரா புதிய தலைமுறை
இந்தியா

கேரளா: மூளையை தாக்கும் அமீபாவை தொடர்ந்து வேகமாக பரவி வரும் காலரா

Jayashree A

கொரோனா, பறவை காய்ச்சல், மூளையை தாக்கும் அமீபா இப்படி நோய்களை கண்டறிவதில் முதலிடம் பிடித்த கேரளாவில் தற்போது காலரா பரவி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.

காலரா

காலரா என்பது, விப்ரியோ காலரே (Vibrio cholerae) எனப்படும் பாக்டீரியாவினால் உண்டாகும் ஒரு தொற்று. இது சிறுகுடலில் பாதிப்பை ஏற்படுத்தி, மற்றவர்களுக்கு பரவக்கூடிய குடலழற்சி (gastroenteritis) நோய் ஆகும். இப்பாக்டீரியா தொற்று கொண்ட உணவு அல்லது நீரை அருந்துவதன் மூலம் மனிதருக்கு பரவுகிறது.

காலரா முதன்மையாக அசுத்தமான தண்ணீரால் ஏற்படுகிறது. சமைக்கப்படாத காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுகளிலும் விப்ரியோ காலரா பாக்டீரியாக்கள் இருக்கலாம்.

நோயின் அறிகுறிகள்

வாந்தி மற்றும் குமட்டல், லேசானது முதல் மிதமான வயிற்றுப்போக்கு, நீரிழப்பு.

காலராவால் ஏற்படும் நீரிழப்பு கடுமையானதாக இருக்கும். இது குறைந்த இரத்த அழுத்தம், சோர்வு, சுருங்கிய கண்கள், மனநிலை பாதிப்பு, வறண்ட வாய், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது. இது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளின் இழப்பை மேலும் இழக்கச்செய்து அதிர்ச்சிக்கு வழிவகுக்கும்.

குழந்தைகள் காலராவால் தாக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

காலராவுக்கான சிகிச்சை

காலராவுக்கு சிகிச்சையளிப்பதற்கான பொதுவான வழிகளில் சில பின்வருமாறு: உடலில் குறையும் திரவ நிலையை சரிசெய்வதற்காக எலக்ட்ரோலைட்டுகள் கொடுக்கப்பட வேண்டும். மேலும் மருத்துவர் தரும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், காய்ச்சி வடிகட்டிய குடிநீரை அருந்த வேண்டும். மேலும் சிங்க் (துத்தநாகம்) அடங்கிய பழங்கள், உணவுகளை சாப்பிட்டு வர, காலராவை தடுக்கலாம்.

கேரளாவில் பரவி வரும் காலரா

திருவனந்தபுரம் நெய்யாற்றின் கரையில் உள்ள காருண்யா விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு காலரா நோய் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த விடுதியில் தங்கி படித்து வந்த மனு என்ற மாணவன் காலரா நோய் தாக்கத்தால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரின் உடற்கூராய்வின் அறிக்கை இன்னும் வெளிவரவில்லை.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுகாதாரத்துறை அவ்விடுதியில் இருக்கும் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், விடுதியில் தங்கி படித்து வரும் பதினோரு வயது சிறுவனுக்கு காலரா இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அச்சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரைத்தொடர்ந்து அவ்விடுதியில் மேலும் 16 பேர் காலரா அறிகுறிகளுடன் காணப்பட்டதால் அவர்கள் அனைவரும் பாறசாலை மற்றும் நேமம் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருவனந்தபுரம் எஸ்ஏடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பதினொரு வயது சிறுமி ஒருவருக்கு காலரா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் காருண்யா விடுதி மாணவர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் காலரா தடுப்பூசியானது போடப்பட்டு வருகிறது. இதனையடுத்து சுகாதாரத்துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.