கங்கனா ரனாவத், சிராக் பஸ்வான்  எக்ஸ் தளம்
இந்தியா

தொடர் சர்ச்சையில் சிக்கும் கங்கனா ரனாவத்.. அறிவுரை வழங்கிய சிராக் பஸ்வான்!

”அரசியலுக்கு புதிது என்பதால் கங்கனா ரனாவத்துக்கு அரசியல் புரிய நாளாகும் என லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான் விமர்சித்துள்ளார்.

Prakash J

இமாச்சலப் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியான கங்கனா ரனாவத், சமீபகாலமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கி வருகிறார். அந்த வகையில், ”நாடு தழுவிய அளவில் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு நவம்பர் 2021-ல் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தால் திரும்பப் பெறப்பட்ட விவசாயச் சட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். இது சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால் ரத்து செய்யப்பட்ட பண்ணைச் சட்டங்கள் திரும்பக் கொண்டுவரப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். விவசாயிகளே அதைக் கோர வேண்டும்” என சமீபத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியிருந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கங்கா ரனாவத்தின் இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளானதைத் தொடர்ந்து, பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, “கட்சி சார்பில் இதுபோன்று கருத்து சொல்ல கங்கனா ரனாவத்துக்கு அதிகாரம் இல்லை” என எச்சரித்திருந்தார். இதையடுத்து, கங்கனா ரனாவத், தாம் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்த நிலையில், அரசியலுக்கு புதிது என்பதால் கங்கனா ரனாவத்துக்கு அரசியல் புரிய நாளாகும் என லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ”கங்கனா பேசியது என்னைத் தொந்தரவு செய்யவில்லை. அவர், தான் இன்னும் ஓர் நடிகை அல்ல என்பதை உணரவேண்டும். அவர் தற்போது ஒரு கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர். அவரின் தனிப்பட்ட கருத்து என்றால் அதனை நான் மரியாதை கொடுத்து ஏற்கிறேன்.

ஆனால், அரசியல் கட்சியின் ஓர் அங்கமாக மாறியபிறகு, கட்சி முடிவுகளை அவமதிக்காத வகையில் பேச வேண்டியது அவசியமான பொறுப்பாகிறது. கங்கனா அரசியலுக்கு புதியவர். இதுபோன்ற செயல்களைப் புரிந்துகொள்ள நாள்கள் தேவைப்படும். ஆனால், அவர் புத்திசாலிதான். இவற்றை விரைவில் புரிந்துகொள்வார்” எனத் தெரிவித்துள்ளார்.