இந்தியா

நாடாளுமன்றத்தில் சுஷ்மா பொய்த் தகவல்: சீன அரசு ஊடகம் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் சுஷ்மா பொய்த் தகவல்: சீன அரசு ஊடகம் குற்றச்சாட்டு

webteam

இந்தியா-சீனா இடையிலான எல்லைப்பிரச்னை தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் பொய்யான தகவலை அளித்ததாக சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் பத்திரிகை குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அந்த பத்திரிகை வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்தில், தோக்லாம் எல்லை விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைகள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக இந்தியா எடுத்துவரும் மூர்க்கமான நடவடிக்கைகளுக்கு எந்தவொரு உலக நாடும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

தோக்லாம் பகுதி சீனாவுடையது என்று குறிப்பிட்டுள்ள குளோபல் டைம்ஸ் நாளிதழ், நீண்டகாலமாக நீடித்துவரும் இந்தப் பிரச்னையைத் தீர்க்க அந்தப் பகுதியை விட்டு இந்தியா வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளது. சீனாவுக்கு சொந்தமான பகுதிகளில் இந்தியா தொடர்ந்து அத்துமீறும் செயல்களில் ஈடுபட்டு வந்தால், ராணுவ நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும் என்றும் அந்த தலையங்கத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிக்கிம் மாநிலத்தில் உள்ள தோக்லாம் எல்லை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தியா-சீனா மற்றும் பூடான் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதி தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த தவறும் இல்லை என்று குறிப்பிட்டார். மேலும், இதுதொடர்பாக இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் ஆதரவு இருப்பதாகவும் சுஷ்மா கூறியிருந்தார்.