இந்தியா

ஆயிரக்கணக்கான கோடிகளில் சீனாவுக்கு ஹவாலா பணப்பரிமாற்றம் : யார் இந்த லு சாங் ?

ஆயிரக்கணக்கான கோடிகளில் சீனாவுக்கு ஹவாலா பணப்பரிமாற்றம் : யார் இந்த லு சாங் ?

webteam

இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்காக கோடிகளில் சீன நிறுவனங்களுக்காக ஹவாலா மோசடி நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவில் இயங்கும் சீன நிறுவனங்கள் சில இடைத்தரகர்களின் உதவியுடன் ஹவாலா மோசடியில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு தெரிய வந்தது. இதுதொடர்பாக டெல்லி, காஸியாபாத், குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் சீன நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின் முடிவில் லு சாங் என்ற சீன நபர், முக்கிய இடைத்தரகராக இருந்து செயல்பட்டது தெரியவந்துள்ளது.

இவர் தனது பெயரை சார்லி பாங் என மாற்றிக்கொண்டு வசித்துள்ளார். மணிப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்ட இந்நபர், தனது பெயரில் இந்திய பாஸ்போர்ட் மற்றும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்து வைத்திருந்துள்ளார். அத்துடன் 40க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை தொடங்கியிருக்கிறார். கடந்த 2018ஆம் ஆண்டே ஹவாலா மோசடியில் ஈடுபட்டதாக இவரை டெல்லி போலீஸார் கைது செய்திருக்கின்றனர். அதன்பின்னர் நீதிமன்றத்தின் மூலம் இவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் வங்கி அதிகாரிகள், ஆடிட்டர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களுக்கும் தொடர்பிருக்கும் என்பதால், அவர்களிடமும் வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த ஹவாலா மோசடியில் பல வங்கி பிரமுகர்களுக்கு தொடர்பிருக்கலாம் எனப்படுகிறது. லு சாங் மூலம் மட்டும் தினந்தோறும் சுமார் 3,000 கோடி ரூபாய் ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. ஹாங்காங் மற்றும் அமெரிக்க டாலர்களில் இந்த ஹவாலா பரிமாற்றம் நடைபெற்றிருக்கிறது.

அத்துடன் சீன நிறுவனங்கள் இதில் ரூ.1000 கோடி வரை மோசடி செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், சீன நிறுவனம் ஒன்றுக்கு துணை நிறுவனமாக செயல்பட்டு வரும் இந்திய நிறுவனம், ரீடெய்ல் ஷோரூம்களைத் திறந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபட ரூ.100 கோடி பணம் பெற்றிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.