மொபைல் ஃபோன்களில் பதியப்படும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா என்று விளக்கம் கேட்டு அதன் உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வரும் 28 ஆம் தேதிக்குள் இது குறித்த விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் கெடு விதித்துள்ளது.
சீனாவின் விவோ, ஓப்போ, ஜியோமி உட்பட 21 செல்ஃபோன் உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோன்களில் சேமிக்கப்படும் வாடிக்கையாளரின் தகவல்கள் திருடப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் எல்லையில் பதற்ற நிலை 50 நாட்களுக்கு மேல் நீடித்து வரும் நிலையில் அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் விற்கப்படும் மொபைல் ஃபோன்களில் பெரும்பாலானவை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் முன்னரே பதியப்பட்ட மென்பொருட்கள் மூலம் தகவல்கள் களவு போக வாய்ப்பிருப்பதாக அரசு சந்தேகப்படுகிறது. மேலும் இந்தியாவில் விற்கப்படும் மொபைல் ஃபோன்களின் சர்வர் சீனாவில் இருப்பதும், அரசுக்கு தகவல் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.