செயற்கைக்கோள் வரைபடம் எக்ஸ் தளம்
இந்தியா

எல்லையில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கும் சீனா! படம்பிடித்த செயற்கைக்கோள்.. உற்றுநோக்கும் இந்திய ராணுவம்

அருணாச்சல பிரதேசத்தில் இருந்து சுமார் 20 கி.மீட்டர் தொலைவில் சீனா ஹெலிகாப்டர் தளம் ஒன்றை அமைத்து வருவது தற்போது தெரியவந்துள்ளது.

Prakash J

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நெடுங்காலமாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமைகோரி வருகிறது. கடந்த 2021இல் அருணாச்சல பிரதேசத்தில் சுமார் 101 வீடுகளைக் கொண்ட ஒரு புதிய கிராமத்தை சீனா உருவாக்கியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அடுத்து கடந்த ஆண்டு, சீனா புதிய வரைபடம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அந்த வரைபடத்தில், ஆக்கிரமிப்பில் வைத்திருக்கும் இந்தியப் பகுதிகளை ’அக்‌ஷயா சின்’ எனக் குறிப்பிட்டிருந்தது. அத்துடன் அருணாச்சல பிரதேச மாநிலத்தை, 'தெற்கு திபெத்’ எனவும் குறிப்பிட்டிருந்தது.

நடப்பாண்டில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீன மொழிப்பெயர்களை சீன அரசு சூட்டியிருந்தது பேசுபொருளானது. தவிர, இந்திய எல்லைப் பகுதிகளில் சுரங்கங்கள், ஹெலிபேடுகள், பாலங்கள் மற்றும் பதுங்குக் குழிகளை அதிகளவில் உருவாக்கி வருகிறது. மேலும், இப்பகுதியில் கூடுதல் போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் உளவு விமானங்களையும் சீனா நிறுத்தி வேவு பார்த்து வருகிறது. இதைத் தொடர்ந்து, லடாக்கில் இந்திய - சீன எல்லைப்பகுதியில் உள்ள பாங்காங் நதியின் [Pangong Lake] குறுக்கே 400 மீட்டர் பாலத்தை சீனா கட்டி முடித்தது. இப்பாலம் கட்டப்பட்டது முதல் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அந்தப் பாலம் செயல்பாட்டில் உள்ளது என்பதை செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தின. சீன துருப்புகள் பாங்காங் நதியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளுக்கு எளிதாகச் சென்று வர உதவும் வகையில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இதையும் படிக்க: நேற்று பேஜர்.. இன்று வாக்கி-டாக்கி.. லெபனானில் தொடரும் தாக்குதல்.. விசாரணையில் வெளிவந்த புது தகவல்!

இந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் இருந்து சுமார் 20 கி.மீட்டர் தொலைவில் சீனா ஹெலிகாப்டர் தளம் ஒன்றை அமைத்து வருவது தற்போது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக செயற்கைக்கோள் படம் வெளியாகி உள்ளன. இந்தியாவின் அண்டை நாடான திபெத்தின் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள நியிஞ்சி மாகாணத்தில், கோங்கிரிகாபு ஆற்றின் கரையோரம் இந்த ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் எந்த கட்டுமானமும் அங்கு இல்லை. அதேமாதம் 31ஆம் தேதி எடுக்கப்பட்ட படத்தில் நிலம் தூய்மைப்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது.

கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் புதிய ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு வருவது தெளிவாக தெரிகிறது. இந்த ஹெலிகாப்டர் தளத்தில் 600 மீட்டர் துாரத்திற்கு ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் புறப்படுவதற்கு இது சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஹெலிகாப்டர்களை நிறுத்துவதற்கு மூன்று ஹேங்கர்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு வசதி மற்றும் அது தொடர்பான கட்டமைப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீனாவின் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் செயல்களுக்கான திறனை அதிகரிக்கும் இந்த ஹெலிகாப்டர் தளம் தொடர்பான விசயங்களை காண்காணித்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க: குடும்பங்கள் கொண்டாடிய Tupperware-க்கு இப்படியொரு நிலையா? திவால் நிலைக்குச் சென்ற துயரம்!