லடாக்கில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார்.
இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நேற்று சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய அதிகாரி உட்பட 3 பேர் இந்திய தரப்பில் வீரமரணம் அடைந்தனர். சீனா- இந்தியா இடையே தொடர்ச்சியாக எல்லைப் பிரச்னை இருந்து வரும் நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தையும் நடந்தது.
ஆனாலும் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சீன ராணுவத்தின் இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி என்பவரும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கு வயது 40. அவரது சகோதரர் ஒருவரும் 10 வருடம் ராணுவத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, சீன ராணுவத்தினருக்கு இந்தியா தரப்பில் கொடுக்கப்பட்ட பதிலடி தாக்குதலில் சீன வீரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.