மத்தியப் பிரதேசம் முகநூல்
இந்தியா

”டிவி, செல்போன் பார்க்க விடவில்லை” - பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த குழந்தைகள்!

மத்தியப் பிரதேசத்தில் டிவி , செல்போன் பார்க்கவிடாமல் தடுத்ததாக பெற்றோர்கள் மீது குழந்தைகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

மத்தியப் பிரதேசத்தில் டிவி, செல்போன் பார்க்கவிடாமல் தடுத்ததாக பெற்றோர்கள் மீது குழந்தைகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன், டிவி போன்ற பொழுதுப்போக்கு அம்சங்கள் இல்லாமல் குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை யாரும் இருப்பதில்லை. கேம் விளையாடுவது, ரீல்ஸ் பார்ப்பது என தொடர்ந்து செல்போனிலேயே மூழ்கியுள்ளனர். இறுதியில் இது மிகப்பெரிய அடிமைத்தனத்திலேயே சென்று முடிகிறது.

வீட்டில் குழந்தைகள் இத்தகையவற்றில் அடிமையாகாமல் தடுப்பதே பெரும்பாலான பெற்றோர்களின் வேலையாக இருக்கிறது. இந்தவகையில், மத்தியப் பிரதேசத்தில் டிவி , செல்போன் பார்க்கவிடாமல் தடுத்ததாக பெற்றோர்கள் மீது குழந்தைகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேசம் இந்தூரை சேர்ந்த தம்பதியினருக்கு 21 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில், இக்குழந்தைகளின் பெற்றோர் இவர்களை கோவிட் - 19 லாக்டவுன் காலத்திலிருந்தே மொபைல் போன்களையும், டிவியையும் பார்க்கக்கூடாது என தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த இவர்களின் குழந்தைகளான, 21 வயது சகோதரியும், 8 வயது மகனும் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி தங்களின் பெற்றோர்களுக்கு எதிராக சாந்தன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள புகாரில், பெற்றோர் தங்களை துன்புறுத்தியதாகவும், உணவு வழங்காமலும், தொலைக்காட்சி, செல்போன்கள் பார்க்கக் தடை செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், குடும்பத்தில் வேறு சில பிரச்னைகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, குழந்தைகள் தங்களின் அத்தை வீட்டில் வசித்து வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வழக்கை விசாரித்த காவல்துறையினர் குழந்தைகளின் பெற்றோருக்கு எதிராக இந்திய தண்டனைச்சட்டத்தின் பிரிவுகள் 323, 342, 506 மற்றும் 34 சிறார் நீதிச்சட்டத்தின் கீழ் மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர். இதனால், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் குழந்தைகளின் தந்தை அஜய் சௌஹான் உயர்நீதிமன்றத்தில், தன் மீதும், தன் மனைவிக்கு எதிராகவும் தொடுக்கபட்ட வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம் தற்போது இந்த வழக்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.