வீட்டை விட்டு வெளியே செல்லும்போது 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் முகக்கவசம் அணியவேண்டும் என ஒடிசா மாநில அரசு அறிவுறுத்தியிருக்கிறது
நாடு முழுவதும் குழந்தைகளிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு முன்பு முகக்கவசம் அணிவதை உறுதி செய்யுமாறு பெற்றோர்களிடம் ஒடிசா மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு எழுதிய கடிதத்தில் ஒடிசா மாநில அரசு இதனை வலியுறுத்தியுள்ளது. இருமல், சளி, காய்ச்சல், வாசனை திறன் இழப்பு, சுவைதிறன் இழப்பு, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் உள்ள குழந்தைகளை சோதனைசெய்து தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. குழந்தைகள் மட்டுமின்றி சிறார்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற உரிய அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.