இந்தியா

தெருநாய்கள் கடித்து 2 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் - டெல்லி மாநகராட்சி ஆணையருக்கு சம்மன்

தெருநாய்கள் கடித்து 2 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் - டெல்லி மாநகராட்சி ஆணையருக்கு சம்மன்

webteam

டெல்லியில் தெருநாய்கள் தாக்கி இரு சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்க டெல்லி மாநகராட்சி ஆணையருக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது

டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சில தினங்களுக்கு முன் ஆனந்த் (7) என்ற சிறுவன் காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.  இரண்டு மணி நேரம் நீண்ட தேடுதலுக்குப் பிறகு அருகிலுள்ள காட்டில் சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வில் சிறுவனின் உடலில் நாய் போன்ற விலங்குகள் தாக்கியதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. இது தொடர்பான காவல்துறையின் விசாரணையில் அப்பகுதி மக்கள், சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட காட்டுப்பகுதிகளில் தெரு நாய்கள் அதிகளவில் உள்ளதாகவும், அதேபோல காட்டு பன்றிகள் உள்ளிட்டவை மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு, மார்ச் 12 அன்று ஆனந்தின் தம்பி ஆதித்யா (5), தன் உறவினர் சாந்தனுடன் (24) அவசரத் தேவைக்காக அதே காட்டுப்பகுதிக்குச் சென்றிருக்கிறார். சாந்தன்  சிறுவனை சிறிது நேரம் தனியாக விட்டு சென்றுள்ளார்.

இதற்கிடையில் சிறுவன் ஆதித்யா தெரு நாய்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிகிறது. இதையடுத்து, படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆதித்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அண்ணன் உயிரிழந்த சில தினத்தில் தம்பியும் பரிதாபமாக தெரு நாய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி மாநகராட்சிக்கு, காவல்துறை கடிதம் அனுப்பியுள்ள நிலையில், குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் டெல்லி மாநகராட்சியின் ஆணையருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.