இந்தியா

மக்கள் பிரதிநிதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு : தலைமைச் செயலாளர் உத்தரவு

மக்கள் பிரதிநிதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு : தலைமைச் செயலாளர் உத்தரவு

webteam

மாநிலத்தில் தற்போதைய எம்எல்ஏவும் முன்னாள் எம்எல்ஏவும் மாவோயிஸ்ட் கும்பலால் படுகொலை செய்யப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டினம் அரக்கு பகுதியில் கிராமம் ஒன்றிற்கு மக்களை சந்திக்க சென்ற தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த கிடாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா ஆகியோரை மாவோயிஸ்ட் கும்பல் நேற்று படுகொலை செய்தது. இந்நிலையில் எம்எல்ஏவுக்கும் முன்னாள் எம்எல்ஏவுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை எனக் கூறி அவர்களது ஆதரவாளர்கள் அரக்கு மற்றும் தும்ப்ரிகுடா ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களை சூறையாடினர். அங்கிருந்த ஓலை கொட்டகைக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. போலீசார் தடியடி நடத்தி ஆதரவாளர்களின் வன்முறைகளை தடுத்து கட்டுப்படுத்தினர். இதற்கிடையில் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பொது மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக கிராமப்புறங்களுக்கு செல்லும் எம்பி, எம்எல்ஏக்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க அம்மாநில தலைமைச் செயலாளர் தினேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். உள்ளார்ந்த பகுதிகளுக்கு செல்வதை மக்கள் பிரதிநிதிகள் தவிர்க்க வேண்டும் என்றும் அவசியம் செல்லவேண்டியிருந்தால் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய தகவல் தந்துவிட்டு செல்லுமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் அமெரிக்கா சென்றுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, படுகொலை சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ஆந்திர ஆளுநர் நரசிம்மனும் இச்சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.