இந்தியா

“இன்று ஒருவருக்குகூட கொரோனா தொற்று இல்லை” - கேரள முதல்வர் பேட்டி 

“இன்று ஒருவருக்குகூட கொரோனா தொற்று இல்லை” - கேரள முதல்வர் பேட்டி 

webteam
கேரளாவில் இன்று ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 
 
கேரள மாநிலத்தில் இதுவரை கொரோனா நோய்த் தொற்றுக்கு 502 பேர் ஆளாகியுள்ளனர். இதுவரை இந்த நோய்த் தொற்றால் 4 பேர் இறந்துள்ளனர். கேரள மாநிலம் இந்த நோய்த் தொற்றிலிருந்து மெல்ல மீண்டு வருகிறது. இன்று அந்த மாநிலத்தில் ஒரு நபர்கூட கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என்ற ஆறுதலான செய்தி வெளியாகியுள்ளது.
 
 
இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கேரளாவில்  இன்று ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை” என்றார்.  தொடர்ந்து பேசிய அவர், “மாறாக கோட்டயம் 6, பத்தனம்திட்டாவில் ஒருவர் என ஏழு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 37லிருந்து 30 ஆகக் குறைந்துள்ளது.
 
 
மாநிலத்தில் அதிகபட்சமாக கண்ணூரில் 18 பேர் உட்பட காசர்கோடு, வயநாடு, கொல்லம், இடுக்கி, பாலக்காடு ஆறு மாவட்டங்களில் மட்டுமே கொரோன பாதிப்புகள் உள்ளது. மீதமுள்ள கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழா திருவனந்தபுரம் ஆகிய எட்டு மாவட்டங்களில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.
 
 
கேரளாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் 502 பேர். மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் 470 பேர். இதுவரை மாநிலம் முழுக்க 16,620 பேர் மருத்துவக்கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 14,402 பேர் வீடுகளிலும் 268 பேர்  மருத்துவமனைகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் இருந்து நோய்த் தொற்று அறிகுறியுள்ள 34,597 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதில் 34,063 பேரின் பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் ஆக வந்துள்ளது” என்றார்.