பிரேன் சிங் எக்ஸ் தளம்
இந்தியா

மணிப்பூர்: வன்முறை குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய காங். எம்.எல்.ஏ... விளக்கமளித்த முதல்வர்!

Prakash J

மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த வருடம் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... வன்முறைக் காடானது மணிப்பூர்.

கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிர கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். இன்னும் பலரும் அண்டை மாநிலங்களில் குடியேறினர்.

மணிப்பூர் கலவரம்

இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்த வன்முறை, ஓராண்டைக் கடந்தும், இன்றளவும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலை, மணிப்பூர் மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவின் தோல்விச் சின்னமாகவே பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளும் இதுகுறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இதையும் படிக்க: “ரூ.1200 கோடி கட்டடத்தை பாதுகாக்க ரூ.120 பக்கெட்”- ஒழுகிய மழைநீர்.. விமர்சனத்தில் புதிய நாடாளுமன்றம்

இந்த நிலையில், மணிப்பூரில் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ கே.மேகச்சந்திரா கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதல்வர் பிரேன் சிங் பதிலளித்தார். அவர், “மே 2023 முதல் மாநிலத்தில் நடைபெற்றுவரும் வன்முறையால் 226 பேர் இறந்துள்ளனர். 39 பேர் காணாமல் போயுள்ளனர். 59,414 பேர் நிவாரண முகாம்களில் (ஜூலை 30 வரை) தங்கவைக்கப்பட்டுள்ளனர். வன்முறை தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் 11,133 வீடுகள் தீவைக்கப்பட்டுள்ளன. 11,892 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5,554 விவசாயிகளின் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பிரேன் சிங், மணிப்பூர் கலவரம்

விவசாய இழப்புகளை அங்கீகரிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட 3,483 விவசாயிகளுக்கு ரூ.18.91 கோடி பயிர் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் உள்ள மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கு வசதியாக நிவாரண முகாம்களில் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களில் உள்ள மக்களின் உடல் மற்றும் மனநலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வழக்கமான மருத்துவ பரிசோதனைகள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஆலோசனை சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆதார் அட்டைகள், ரேஷன் கார்டுகள் மற்றும் வங்கிக் கடவுச்சீட்டுகள் போன்ற முக்கிய ஆவணங்களை மறுகட்டமைப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி படுகொலை! யார் இந்த முகமது டெய்ஃப்?