இந்தியா

‘உன்னாவ் பெண்ணின் கடிதம் ஏன் என் பார்வைக்கு வரவில்லை’ -  நீதிபதி கேள்வி 

‘உன்னாவ் பெண்ணின் கடிதம் ஏன் என் பார்வைக்கு வரவில்லை’ -  நீதிபதி கேள்வி 

webteam

உன்னாவ் பகுதி பெண் ஜுலை மாதம் 12ஆம் தேதி எழுதிய கடிதம் ஏன் தன் முன் இன்னும் வரவில்லை என உச்சநீதிமன்ற பதிவாளரிடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம் கேட்டுள்ளார். 

உன்னாவ் பகுதியில் பெண் ஒருவர் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது பாலியல் புகார் அளித்தார். இதனையடுத்து இந்த எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் இந்தப் பெண்ணின் தந்தை சிறையில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டார். அதன்பின்னர் கடந்த ஞாயிற்றுகிழமை இந்தப் பெண் சென்ற கார் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அப்பெண்ணின் தாய் மற்றும் உறவினர் ஒருவரும் உயிரிழந்தனர். 

இதனையடுத்து அப்பெண் தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக இம்மாதம் 12ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியது தெரியவந்தது. இந்தக் கடிதத்தில், “இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் என் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் கொலை முயற்சி நடத்த வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் எங்களை எம்.எல்.ஏ மிரட்டி வருகிறார்”எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இந்தக் கடிதம் ஏன் இன்னும் அவர் முன் வரவில்லை என்பது தொடர்பாக விளக்கம் அளிக்க உச்சநீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்தக் கடிதம் அவரிடம் வருவதற்கு ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பான ஒரு விரிவான அறிக்கையை இன்னும் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.