இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையின்போது, மனுதாரர்களில் ஒருவரான மூத்த வழக்கறிஞர் நரேந்தர் ஹூடா தன் தரப்பு வாதங்களை வைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது பெஞ்ச் எழுப்பிய கேள்விக்கு, மற்றொரு மூத்த வழக்கறிஞரான மேத்யூஸ் நெடும்பாறை குறுக்கிட்டு, ”நான் ஒன்று சொல்ல வேண்டும்; நீதிமன்றத்தின் முன் இருக்கும் அனைத்து வழக்கறிஞர்களிலும் நான்தான் மூத்தவர்” என்றார்.
அதற்குப் பதில் அளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், “ஹூடா முடித்தபின்பு, உங்கள் வாதத்தைத் தொடரலாம்” என்றார்.
அதற்கு நெடும்பாறை, "நீங்கள் என்னை மதிக்கவில்லை என்றால், நான் நீதிமன்றத்தைவிட்டு வெளியேறுவேன்" என்றார்.
அதற்கு நீதிபதி சந்திரசூட், ”நான் உங்களை எச்சரிக்கிறேன். நீதிபதிகளிடம் அப்படி பேசக்கூடாது. இந்த நீதிமன்றத்திற்கு நான்தான் பொறுப்பு. பாதுகாப்பு அதிகாரிகளை அழைப்பு விடுக்கிறேன். அவரை, இங்கிருந்து அகற்றுங்கள்" என எச்சரித்தார்.
அதற்கு வழக்கறிஞர் நெடும்பாறை, "நானே இங்கிருந்து செல்கிறேன்" எனப் பதிலளித்தார். அதற்கு தலைமை நீதிபதி சந்திரசூட், "நீங்கள் அதைச் சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் செல்லலாம். கடந்த 24 ஆண்டுகளாக நீதித்துறையை நான் பார்த்து வருகிறேன். இந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆணையிட அனுமதிக்க முடியாது" என்றார்.
தொடர்ந்து வழக்கறிஞர் நெடும்பாறை குறுக்கிட்டு, "நான் 1979இல் இருந்து பார்க்கிறேன்" என்றார். அதற்கு நீதிபதி சந்திரசூட், ”நெடும்பாறை தனது நடத்தையை தொடர்ந்தால் அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என எச்சரித்தார்.
இதையடுத்து வழக்கறிஞர் நெடும்பாறை நீதிமன்றத்திலிருந்து வெளியேறினார். பின்னர் நீதிமன்றத்திற்குத் திரும்பிய நெடும்பாறை, "மன்னிக்கவும், நான் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு அநீதி இழைக்கப்பட்டது. தலைமை நீதிபதியை அவமதித்ததற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்" எனத் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் உடன் நெடும்பாறை சண்டையிடுவது இது முதல்முறையல்ல. இந்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் பத்திர வழக்கு விசாரணையின்போது, நெடும்பாறையை தலைமை நீதிபதி எச்சரித்தபோதிலும், விசாரணைக்கு இடையூறு ஏற்பட்டது. அதாவது, அந்த சமயத்தில் முறையாக மனுத் தாக்கல் செய்யாமல் நீதிமன்றத்தில் வாதத்தின்போது குறுக்கிட்டு கத்தியதற்காக வழக்கறிஞர் நெடும்பாறையை கடுமையாக சாடினார் தலைமை நீதிபதி. "என்கிட்ட கத்தாதீங்க. இது ஹைட் பார்க் கார்னர் கூட்டம் அல்ல, நீங்கள் நீதிமன்றத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு விண்ணப்பத்தை நகர்த்த விரும்புகிறீர்கள், ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் தலைமை நீதிபதியாக எனது முடிவைப் பெற்றுள்ளீர்கள், நாங்கள் உங்கள் கருத்தை கேட்கவில்லை. நீங்கள் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்ய விரும்பினால், அதை மின்னஞ்சலில் நகர்த்தவும் இது, நீதிமன்றத்தின் விதி” என எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தொடர்பான வழக்கில் வழக்கறிஞருக்கும் தலைமை நீதிபதிக்கும் இடையை நடந்த காரசார விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது