இந்தியா

"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல" - தேர்தல் ஆணையர்

"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல" - தேர்தல் ஆணையர்

webteam

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது இப்போதைக்கு சாத்தியமல்ல என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை செயல்படுத்த சட்டரீதியான அங்கீகாரம் தேவைப்படுவதாகத் தெரிவித்தார். இப்போது உள்ள சட்டமன்றங்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பதோ, குறைப்பதோ அரசியல் சாசனச் சட்டத் திருத்தம் மூலம் மட்டுமே செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். மேலும், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்துவதில், யாருக்கு ஓட்டளித்தோம் என்ற சீட்டு வழங்கும் இயந்திரங்கள் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கோரிக்கை தொடர்பாக 2015ஆம் ஆண்டிலேயே தேர்தல் ஆணையம் தனது கருத்தைத் தெரிவித்து விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை அமல்படுத்த பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தொடர்ந்து ஆதரவு கேட்டு வரும் நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையரின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.