இந்தியா

'தெரிந்தே விதிகளை மீறினார்'- சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை

'தெரிந்தே விதிகளை மீறினார்'- சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை

webteam

ஏர்செல்- மேக்சிஸ் முதலீடுக்கான அனுமதி, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுக்கு செல்வதை தடுக்க, அப்போது நடைமுறையில் இருந்த விதிமுறைகளை முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் மீறியிருப்பதாக சிபிஐயின் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு அனுமதியளிக்கப்பட்ட காலகட்டத்தில், வெளிநாட்டு முதலீடு வளர்ச்சி வாரியத்தின் கூடுதல் செயலாளராக இருந்த அசோக் சாவ்லா, இணைச் செயலாளர் சஞ்சய் கிருஷ்ணா, செயலாளர்கள் ராம் ஷரன், மற்றும் தீபக் குமார், அப்போதைய பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலாளர் அசோக் ஜா உள்ளிட்டோர் சிதம்பரத்துடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. 

மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தின் பத்து ரூபாய் முகமதிப்பு கொண்ட18 கோடி பங்குகளை வாங்கியது. 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்கும் சுமார் 198 ரூபாய்க்கும் வாங்கப்பட்டது. இதன் அடிப்படையில் மொத்த முதலீடு சுமார் 3,650 கோடி ரூபாயாக இருந்தது. அப்போது நடைமுறையில் இருந்த அரசு ஆணையின்படி நிதி அமைச்சரால் 600 கோடி ரூபாய் வரையிலான வெளிநாட்டு முதலீடுகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கமுடியும். இதற்கு மேல் உள்ள முதலீடுகள் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பப்பட்டிருக்கவேண்டும்.

 ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் 3,650 கோடி ரூபாய் முதலீடு என்பது மறைக்கப்பட்டு வெறும் 180 கோடி ரூபாய் மட்டுமே முதலீடாக காட்டி அனுமதி அளித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிந்தே, சிதம்பரம் விதிமுறைகளை மீறி ஏர்செல்-மேக்சிஸ் முதலீட்டிற்கு அனுமதியளித்துள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.