இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளதால் மாட்டிறைச்சிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அச்சம் நிலவுகிறது. இதன் விளைவாக, கோழி இறைச்சியின் விலை 30 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
கடந்த 2013-14 ஆண்டுகளில் மாட்டிறைச்சியின் விலை பத்து சதவீதம் வரை அதிகமாகவும், அதற்கு எதிராக பண்ணைக் கோழியின் விலை ஒன்பது சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்ததாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இதுதொடர்பாக, இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்கூட்டமைப்பு (அசோசெம்) ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கோழிப் பண்ணை தொழிலில் 10 முதல் 12 சதவீதம்வரை வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப கோழி இறைச்சியின் பயன்பாடும் 18 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும் அந்த அமைப்பு ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. அதேவேளையில், மாட்டிறைச்சி மீது பல்வேறு வகைகளில் விதிக்கப்பட்டுவரும் தடைகளின் எதிரொலியாக இந்த ஆண்டின் மார்ச் முதல் மே மாதத்துக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மாட்டிறைச்சியின் விலை 3 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதற்கு நேர்மாறாக பண்ணை கோழியின் விலை 22 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக, மாட்டிறைச்சி மீதான தடை ஆந்திரா, ஹரியானா, கர்நாடகம், கேரளா, மகராஷ்ட்ரா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோழிப் பண்ணை தொழிலில் லாபம் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட மாநிலங்களில் உள்ள சுமார் 100 கோழிப் பண்ணைகளில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில், மாட்டிறைச்சி தடையின் எதிரொலியாக கறிக்கோழியின் விலை தற்போதைய நிலவரப்படியும், குறிப்பாக, ரம்ஜான் பண்டிகை நெருக்கத்தில் 25 முதல் 30 சதவீதம் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிகிறது. கோழி இறைச்சிக்கான தேவையும் 35 முதல் 40 சதவீதம் வரை உயரலாம் எனவும் கருதப்படுகிறது.