கும்பல் தாக்குதல் புதிய தலைமுறை
இந்தியா

சத்தீஸ்கர் | கையில் கோடாரி ஆக்ரோஷம்.. தாக்க வந்த கும்பலிடமிருந்து தந்தையின் உயிரை காப்பாற்றிய பெண்!

சத்தீஸ்கரில் 17 வயது பழங்குடிப்பெண் ஒருவர் தீரத்துடன் தனது தந்தையின் உயிரை காப்பாற்றிய செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Jayashree A

சத்தீஸ்கரில் 17 வயது பழங்குடிப்பெண் ஒருவர் தீரத்துடன் தனது தந்தையின் உயிரை காப்பாற்றிய செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள நாராயண்பூரின் அருகில் இருக்கும் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சோம்தர் கோர்ரம். இவர் நேற்று முந்தினம் இரவு தனது வீட்டில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார். அச்சமயம் வீட்டின் கதவு தட்டும் சத்தம் வரவே சோம்தர் கோர்ரமின் 17 வயது மகள், வீட்டின் ஜன்னல் வழியாக வீட்டிற்கு வந்தது யார் என்று பார்த்துள்ளார். வீட்டிற்கு வெளியே எட்டுப்பேர் அடங்கிய கும்பல் ஒன்று முகத்தில் முகமூடி அணிந்தபடி கையில், கோடாரி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்ததை பார்த்ததும் அதிர்ந்துள்ளார்.

அவர்கள் உன் தந்தை எங்கே என்று கேட்டபடி வீட்டிற்குள் நுழைந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவரை நோக்கி ஆயுதத்தால் தாக்க ஆரம்பித்துள்ளனர். சுதாரித்துக் கொண்ட அப்பெண், தனது தந்தைக்கு ஆபத்து என்று தெரிந்ததும், தனது உயிரையும் பொருட்படுத்தாது, துணிந்து வந்தவர்களில் ஒருவரை தாக்கி, அவர் கையில் இருந்த கோடாரியைப் பரித்துக்கொண்டு கூட்டத்தினரை எதிர்த்து இருக்கிறார்.

இதை எதிர்பார்க்காத அந்த கும்பல் சில நிமிடங்கள் தயங்கி நின்று இருக்கிறது. இதற்குள் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வரவே, அக்கும்பல் பயந்தபடி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறது, இருப்பினும் அப்பெண் தொடர்ந்து அக்கும்பலை பின் தொடர்ந்து சென்று அவர்களை விரட்டி இருக்கிறார்.

இரண்டு நிமிடங்களுக்குள் நடக்கவிருந்த அசம்பாவிதத்தை தைரியத்துடன் தடுத்து நிறுத்தி தனது தந்தையை அப்பெண் காப்பாற்றியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் அக்கும்பலின் தாக்குதலில் சோம்தர் காப்பாற்றப்பட்டாலும் அவர் நெஞ்சில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.

சம்பவத்தைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர், அப்பகுதி மக்களிடம் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் வந்தவர்கள் மாவோயிஸ்டாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.