சுரங்கப் பாதை ட்விட்டர்
இந்தியா

சத்தீஸ்கர்: ஹமாஸ் போல் மாவோயிஸ்ட்கள் உருவாக்கிய சுரங்கப் பாதை.. திகைத்த வீரர்கள்.. வைரல் வீடியோ!

ஹமாஸில் இருக்கும் சுரங்கப் பாதையைப் போன்றே சத்தீஸ்கரிலும் மாவோயிஸ்ட்கள் அமைத்திருப்பதைப் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து உள்ளனர்.

Prakash J

ஹமாஸ் உருவாக்கி இருக்கும் சுரங்கப் பாதை

கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 7ஆம் தேதி தங்கள் நாட்டின் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் தொடங்கிய போர் 3 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் காஸாவிலிருந்து தங்கள் நாட்டு எல்லை வரை பூமிக்கடியில் 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு பிரமாண்ட சுரங்கப்பாதை இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்து, அதை அழிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. இந்தச் சுரங்கப் பாதை சுமார் 80 மீட்டர் வரை ஆழம் கொண்டவையாகவும், இதைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டி இருந்தது. மேலும், இந்த சுரங்கத்தில் ஆயுதங்களை மறைத்து வைக்க, திட்டங்களை வகுக்க, பணயக் கைதிகளை வைக்க பயன்படுத்தப்படும் அறைகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

ஹமாஸ் சுரங்கம்

இந்த நிலையில் இதேபோன்றதொரு சுரங்கப் பாதையை மாவோயிஸ்ட்களும் இந்தியாவில் வைத்திருக்கும் தகவல் பாதுகாப்புப் படையினரின் சோதனையின்போது வெளிவந்துள்ளது. இந்தியாவில் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம், கேரளா ஆகிய வனப் பகுதிகளின் எல்லைகளில் காணப்படும் மாவோயிஸ்ட்கள் அவ்வப்போது தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: ’அடுத்த 48மணிநேரம் பேச முடியாது’-வெளியான மருத்துவ அறிக்கை; உண்மையில் மயங்க் அகர்வாலுக்கு நடந்ததென்ன?

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல்

நக்சலைட் என்ற பெயரில் இயங்கிவந்த இவர்கள், மாவோயிஸ்ட்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஆயுதப் போராட்டத்தின் மூலமாக நாட்டின் அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதையே இவர்கள் லட்சியமாகக் கொண்டு செயல்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் இவர்களின் செயல்பாடுகள் குறைந்துள்ளன என்றாலும், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், பீகார் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் நடவடிக்கைகள் அதிகமாக இருக்கின்றன. இதனிடையே சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீது திடீரென மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். சுக்மா - பிஜாபூர் மாவட்ட எல்லையில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் பேர் கொல்லப்பட்டனர்.

’மாவோயிஸ்ட் இடர் களையப்படும்’ - அமித்ஷா உறுதி

மேலும், இந்தத் தாக்குதலில் 15 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். சத்தீஸ்கரில் கடந்த 2021இல் நடைபெற்ற தாக்குதலில் 23 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். நேற்றைய தாக்குதலும் அதே இடத்தில் நடந்துள்ளது கவனிக்கத்தது. சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் நடைபெற்ற முதல் பெரிய தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இம்மாத தொடக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தின்போது, “அடுத்த மூன்று ஆண்டுகளில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் இடர் களையப்படும்” என்று உறுதியளித்தார். இந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதையும் படிக்க: வாரம் 4 நாட்கள் வேலை: நாளை முதல் சோதனையில் இறங்கும் ஜெர்மனி.. குறைவான வேலைநேர பட்டியலில் 21 நாடுகள்!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் அமைத்த சுரங்கப் பாதை!

இதனையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு வனப் பகுதிகளில் மாவோயிஸ்ட்களைத் தேடி அழிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இத்தேடுதல் நடவடிக்கையின்போது சத்தீஸ்கர் சுக்மா மாவட்டம் தண்டேவடா வனப்பகுதியில் பதுங்குக் குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இப்பதுங்குக் குழிக்குள் இறங்கிய பாதுகாப்புப் படையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம், அது பதுங்குக் குழியாக இருக்கவில்லை. காஸாவில் ஹமாஸ் படையினர் அமைத்திருக்கும் சுரங்கப் பாதையைப் போன்று உள்ளது மாவோயிஸ்ட்களும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப் பாதையை அமைத்துள்ளனர். பாதுகாப்புப் படையினர் இதை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க: I-N-D-I-A கூட்டணியிலிருந்து விலகல் ஏன்? நிதிஷ்குமார் விளக்கம்.. உண்மையான காரணம் என்ன?