இந்தியா

21 ஆண்டுகளாக தாடியை வெட்டாததற்கு இப்படியொரு சமூக ஆர்வமா? - RTI ஆர்வலரின் வியக்கத்தகு செயல்

JananiGovindhan

விசித்திரமான குறிக்கோள், கொள்கைகளை கொண்டவர்கள் பற்றி தொடர்ந்து அறிந்திருப்போம். அந்த வகையில் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் ஒருவர் சமூகத்தில் முக்கியமான மாற்றம் நிகழவேண்டும் என்பதற்காக கடந்த 21 ஆண்டுகளாக தனது தாடியை ஷேவ் செய்யாமல் இருந்து வந்திருக்கிறார். ஆனால் ஒருவழியாக தன்னுடைய தீர்மானம் நிறைவேறிவிட்டதால் கடந்த வெள்ளியன்று (செப்., 09) நீண்ட தாடியை ஷேவ் செய்திருக்கிறார்.

சட்டீஸ்கரின் மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமஷங்கர் குப்தா. ஆர்.டி.ஐ. ஆர்வலரான இவர், மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூரை புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி கடந்த 21 ஆண்டுகளாக தனது தாடியை சவரம் செய்யாமல் இருந்து வந்திருக்கிறார்.

கடந்த ஆண்டே மனேந்திரகர் சிர்மிரி பாரத்பூர் மாவட்டமாக அறிவிக்கப்பட்டாலும் மேலும் ஓராண்டுக்கு தன்னுடைய தாடியை ஷேவ் செய்யாமல் இருந்தவர் கடந்த வெள்ளியன்றுதான் முழுவதுமாக க்ளீன் ஷேவ் செய்திருக்கிறார் என ANI செய்தி நிறுவனம் மூலம் தெரிய வந்திருக்கிறது.

இந்த நிலையில் மனேந்திரகர் சிர்மிரி பாரத்பூரை சட்டீஸ்கரின் 32வது மாவட்டமாக கடந்த வெள்ளியன்று அறிவித்தபோது, மாவட்ட தலைநகராக மனேந்திரகரை நியமித்து, 100 படுக்கைகள் கொண்ட மாவட்ட மருத்துவமனையாக சிர்மிரி மருத்துவமனையை தரம் உயர்த்தியிருக்கிறார். மேலும் இந்த புதிய மாவட்டத்தின் நலத்திட்டங்களுக்காக 200 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பேசியுள்ள ராம்ஷங்கர் குப்தா, “மனேந்திரகர் சிர்மிரி பாரத்பூரை தனி மாவட்டமாக நிறைவேற்றாமல் இருந்திருந்தால் நானும் என்னுடைய தாடியை ஷேவ் செய்யாமலேயே இருந்திருப்பேன். இது 40 ஆண்டுகால போராட்டம். மனேந்திரகர் சிர்மிரி பாரத்பூரை மாவட்டமாக அங்கீகரிக்க போராடிய உண்மையான மக்கள் அனைவரும் இறந்துவிட்டனர். இப்போது அவர்களின் ஆன்மா அமைதியை பெற்றிருக்கும்.

முதலமைச்சர் பூபேஷ் பாகெலிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டீஸ்கரில் மட்டுமல்லா நாட்டிலேயே முன்மாதிரியான மாவட்டமாக மனேந்திரகர் மாவட்டம் மாறும் என நம்பிக்கை இருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.