இந்தியா

''6 மணி நேரத்தில் 14 லட்சம் மாஸ்குகள்'' - சத்தீஸ்கர் போலீசார் உலக சாதனை!!

''6 மணி நேரத்தில் 14 லட்சம் மாஸ்குகள்'' - சத்தீஸ்கர் போலீசார் உலக சாதனை!!

webteam

சத்தீஸ்கரில் உள்ள ராய்கர் மாவட்ட போலீசார் மாஸ்க் மூலம் உலக சாதனை படைத்துள்ளனர்.

உலகமே கொரோனாவால் ஸ்தம்பித்துக் கொண்டிருக்கும் காலக்கட்டம் இது. வெளியே செல்லும்போது நம்மை பாதுகாக்க மாஸ்க் கட்டாயம் அணியவேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. நம் வாழ்க்கை முறையில் மாஸ்க் என்பதும் கட்டாயமாகியுள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கரில் உள்ள ராய்கர் மாவட்ட போலீசார் மாஸ்க் மூலம் உலக சாதனை படைத்துள்ளனர். ரக்‌ஷா பந்தன் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் புது விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, 6 மணி நேரத்தில் 14 லட்சம் மாஸ்குகளை பொதுமக்களுக்கு வழங்கி சாதனை படைத்துள்ளனர். ராய்கர் மாவட்ட தலைமை காவல் அதிகாரி சந்தோஷ் குமார் சிங் முன்னெடுப்பின் படி இந்த சாதனை கோல்டன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாஸ்க் விழிப்புணர்வு பிரச்சாரம் காலை 9 முதல் மதியம் 3 மணி வரை நடத்தப்பட்டது.

115 வாகனங்கள், 362 நிறுவனங்கள், 7500க்கும் அதிகமான தன்னார்வலர்கள் இந்த மாபெரும் விழிப்புணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர். இந்த மாஸ்க் பிரசாரம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள போலீசார் சந்தோஷ் குமார் சிங் , போலீசார், தன்னார்வலர்களும் ஆர்வத்துடன் இந்த பிரசாரத்தை முன்னெடுத்தனர். அதுவே மாஸ்க் பிரசாரம் வெற்றியடைய காரணம் என தெரிவித்துள்ளார்