ராஜேஷ் விஸ்வாஸ் twitter page
இந்தியா

சத்தீஸ்கர்: அணையில் விழுந்த ஸ்மார்ட்போனை எடுக்க 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அரசு அதிகாரி!

நீர்த்தேக்கத்தில் விழுந்த தனது ஸ்மார்ட்போனை மீட்பதற்காக, 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றி வீணடித்த அரசு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Prakash J

சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதியில் அரசு உணவுத்துறை ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர், ராஜேஷ் விஸ்வாஸ். இவர் கோடை விடுமுறையைக் கொண்டாடும் நோக்கில் கடந்த 23ஆம் தேதி, கேர்கட்டா நீர்த்தேக்க பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, தன் விலை உயர்ந்த செல்போனைக் கொண்டு விதவிதமாக செல்ஃபி எடுத்த நிலையில், எதிர்பாராதவிதமாக அவரது செல்போன் அந்த நீர்த்தேக்கத்தில் விழுந்துள்ளது. அவரது செல்போன் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பு கொண்டது எனக் கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன அவர், அங்கிருந்தவர்களை அழைத்து தன்னுடைய செல்போனை மீட்கும்படி கூறியுள்ளார். அவர்களும் முயற்சி செய்தனர்.

ஆனால், 15 அடி ஆழமுள்ள நீர்த்தேக்கத்தில் செல்போன் விழுந்ததால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ராஜேஷ் விஸ்வாஸ், இரண்டு கனரக மோட்டார்களைப் பயன்படுத்தி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றியுள்ளார். செல்போனை மீட்பதற்காக தொடர்ந்து மூன்று நாட்கள் மோட்டார்கள் மூலம் 21 லட்சம் லிட்டர் தண்ணீரை ராஜேஷ் வெளியேற்றியுள்ளார். இந்த தண்ணீர், 1,500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்வதற்கு ஏற்றது என்று கூறப்படுகிறது. இதைத்தான் ராஜேஷ் வெளியேற்றியுள்ளார். இதுகுறித்து நீர் மேலாண்மை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து ராஜேஷை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அவர்கள் வந்து பார்த்தபோது அந்த நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் ஆறு அடிக்கும் கீழே இருந்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் கோடைக்காலத்தில்கூட, குறைந்தபட்சம் 10 அடி ஆழத்திற்கு மேல் தண்ணீர் இருக்கும் எனவும், இந்த நீர்தான் பாசனத்திற்கும் விலங்குகள் குடிப்பதற்கும் உதவுகிறது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்ட தண்ணீரை, செல்போன் விழுந்ததற்காக தனி ஒருவர் வெளியேற்றிய செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து ராஜேஷை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து கான்கேர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா சுக்லா உத்தரவிட்டுள்ளார்.
கேர்கட்டா நீர்த்தேக்கம்

இதுகுறித்து ராஜேஷ் விஸ்வாஸ், “நான் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக என்னுடைய செல்போன் அந்த நீர்த்தேக்கத்துக்குள் விழுந்துவிட்டது. அந்த செல்போனில் நிறைய தரவுகள் இருந்ததால், அதை எடுக்க முயற்சி செய்தேன். அதற்காக உள்ளூர் நபர்களை அணுகினேன். அவர்களும் நீர்த்தேக்கத்தில் இறங்கி தேடினர். அதற்கு பயன் கிடைக்கவில்லை. அவர்கள், ’3 அல்லது 4 அடி ஆழம் அளவுக்கு மட்டும் தண்ணீர் இருந்தால் செல்போனை உடனே எடுத்துவிடலாம்’ என்று ஆலோசனை கூறினர். இதையடுத்து, SDOவை அழைத்து, ’அவ்வாறு செய்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை’ என்றால், அருகில் உள்ள கால்வாயில் கொஞ்சம் தண்ணீர்விட அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டேன். இதையடுத்தே நீரை வெளியேற்றிவிட்டு, செல்போனை எடுத்துவிட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரி, “முதலில் ஐந்து அடிவரை மட்டுமே தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என கூறினோம். அதற்கு ராஜேஸ் ஒப்புக்கொண்டார். ஆனால் அதைவிட அவர், அதிகம் தண்ணீரை வெளியேற்றினார். என்றாலும் மூன்று நாட்களுக்குப் பிறகு கிடைக்கப்பெற்ற அவரது செல்போன் வேலை செய்யவில்லை” என்றார்.

இந்த சம்பவத்தை நான் நிச்சயமாக கவனத்தில் எடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பேன்.
அமரஜீத் பகத், சட்டீஸ்கர் மாநில அமைச்சர்

இந்தச் சம்பவம் குறித்து சட்டீஸ்கர் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான ராமன் சிங், பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தை கடுமையாகச் சாடியுள்ளார். ”சர்வாதிகாரமாய் செயல்படும் மாநில ஆட்சியில், அதன் அதிகாரிகள் இப்பகுதியை தங்கள் பரம்பரைச் சொத்தாகக் கருதுகின்றனர். மக்கள் கடும் வெப்பத்தால் தண்ணீர் தேவைக்காக நீர்த்தேக்கத்தை நம்பியிருக்கும் நிலையில், அரசு அதிகாரி ஒருவர் 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றி இருப்பது கொடுமையான விஷயம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநில அமைச்சர் அமரஜீத் பகத், ”இந்த சம்பவம் குறித்து தனக்கு தெரியாது. இந்த சம்பவத்தை நான் நிச்சயமாக கவனத்தில் எடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.