இந்தியா

’’என்னையா கடிக்கிறாய்?’’ நாகபாம்பை கடித்த சிறுவன் - பாம்புக்கு நேர்ந்த பரிதாபம்!

’’என்னையா கடிக்கிறாய்?’’ நாகபாம்பை கடித்த சிறுவன் - பாம்புக்கு நேர்ந்த பரிதாபம்!

Sinekadhara

சட்டீஸ்கரில் தன்னை கடித்த நாகபாம்பை அதைவிட கடினமாக கடித்து கொன்றுள்ளான் 8 வயது சிறுவன். கேட்பதற்கே விநோதமாக இருக்கிறதல்லவா? ஆனால் அதுதான் உண்மை. இதுபோன்ற விசித்திர நிகழ்வுகள் எப்போதாவது நடப்பதுண்டு. அது சமூக ஊடங்களில் பரவி வைரலாகி பலரின் கவனத்தையும் ஈர்ப்பது வழக்கமாகி விட்டது.

சட்டீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பந்தார்பத் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் தீபக்கை நாகபாம்பு கடித்திருக்கிறது. சிறுவனின் கையை சுற்றிக்கொண்ட பாம்பு அவனை விடாமல் இறுக்கி கையில் கடித்திருக்கிறது. சிறுவனும் கையை சுற்றிய பாம்பிடமிருந்து தப்பிக்க பலவாறு முயன்றிருக்கிறான். ஆனால் பாம்பும் விடாமல் கவ்விக்கொள்ளவே கோபமடைந்த சிறுவன் வேறு வழியில்லாமல் தன்னை கடித்த பாம்பைவிட வேகமாக பாம்பை கடித்துவிட்டான்.

இதனை சற்றும் எதிர்பாராத பாம்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. சிறுவனை காப்பாற்றிய அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு விஷ எதிர்ப்பு தடுப்பூசி செலுத்தப்பட்டதில் சிறுவன் தற்போது உயிருடன் உள்ளான். ஆனால் பாம்பு செத்துவிட்டது.

இதுகுறித்து சிறுவன் தீபக் கூறுகையில், ’’என் கையை சுற்றிய பாம்பு என்னை கடித்துவிட்டது. எனக்கு மிகவும் வலியாக இருந்தது. அதனை கீழே உதற முயற்சித்தபோது அந்த ஜந்து என் கையை விடவில்லை. அதனால் நான் அதை இரண்டுமுறை கடித்தேன். இவை அனைத்தும் சில நொடிகளில் நடந்துவிட்டது’’ என்று கூறியுள்ளான். இந்த விசித்திர சம்பவம் தற்போது சமூக ஊடங்களில் பரவி வைரலாகி வருகிறது.