“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
தெலங்கானா மாநிலத்துக்கான புதிய தலைமைச் செயலகத்தை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த வாரம் திறந்து வைத்தார். ஆந்திராவில் இருந்து தெலங்கானா கடந்த 2014-ம் ஆண்டு தனி மாநிலமாக உருவானது. அப்போது அங்கு தற்காலிகமாக இருந்த தலைமைச் செயலகத்தில் முறையான கார் பார்க்கிங் வசதி கூட இல்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள உசேன் சாகர் ஏரி அருகே ஏற்கனவே பழைய தலைமைச் செயலகம் இருந்த அதேப்பகுதியில் தற்போது புதிதாகத் தலைமைச் செயலகம் கட்டப்பட்டுள்ளது.
‘டாக்டர் அம்பேத்கர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தலைமைச் செயலகம், 28 ஏக்கர் பரப்பளவில் 655 அறைகள் மற்றும் 30 மாநாட்டு அரங்குகளுடன் தெலங்கானாவின் பாரம்பரியங்களைப் பறைசாற்றும் வகையில் மிகவும் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் இந்தகட்டடத்துக்கு ‘கோல்டு ரேட்டிங்’ வழங்கி சிறப்பித்துள்ளது. IGBC பசுமை புதிய கட்டட மதிப்பீட்டு முறையின் கீழ் இந்த ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. பசுமை நிலைத்தன்மையில் பல்வேறு அம்சங்களைக் கொண்ட நாட்டின் முதல் தலைமைச் செயலகமாக தெலங்கானா தலைமைச் செயலகம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் பொன்னி கான்செசாவ் ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலகத்தை வடிவமைத்த இந்தியாவின் முதல் பெண் கட்டிடக் கலைஞர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தெலங்கானா அரசு நாடு முழுவதும் உள்ள கட்டிடக் கலைஞர்களிடம் இருந்து தலைமைச் செயலகத்துக்கான வடிவமைப்புகளைப் பெற்றது. அதை முதல்வர் சந்திரசேகர ராவ் கவனமாக ஆய்வு செய்தப்பிறகு பொன்னியின் கட்டிடக்கலை நிறுவனத்தின் வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்து புதிய செயலகத்தை வடிவமைக்கப் பொன்னியை அழைத்துப் பேசியுள்ளார்.
பின்னர் பொன்னிக்கு தெலங்கானா தலைமைச் செயலகத்தை வடிவமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொன்னியும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிடக்கலையில் அனுபவம் பெற்ற அவரது கணவர் ஆஸ்கர் கான்செசாவோவும் இணைந்து தலைமைச் செயலகப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2020-ல் கோவிட் -19 தொற்று நோயால் ஏற்பட்ட பல்வேறு சவால்களையும் கடந்து வெறும் இரண்டே வருடத்தில் இவர்கள் இந்த மிகப் பெரிய கட்டிடத்தை வடிவமைத்து முடித்துள்ளனர்.
இதுகுறித்து பொன்னி கூறுகையில், “தெலங்கானாவின் மகத்துவத்தையும், தெலங்கானா மக்களின் விருப்பத்தையும் பிரதிபலிக்கும் வடிவமைப்பு முதல்வருக்குத் தேவைப்பட்டது. அது எங்கள் வடிவமைப்பில் இருந்தது. ஹைதராபாத்தின் கிழக்கில் இருந்து மேற்கு வரையில் உள்ள அனைத்து சிறந்தவற்றையும் ஒன்றாகக் கலந்து உருவாக்கப்படும் பாரம்பரிய கட்டிடக்கலை வடிவமைப்பை நாங்கள் இலக்காகக் கொண்டு பணி செய்தோம். இந்த தலைமைச் செயலகத்துக்காக ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட மணலைத் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் தெலங்கானாவிலேயே கொள்முதல் செய்துள்ளோம்.
மேலும் இத்திட்டத்துக்கு அதிநவீன பொருள்களைப் பயன்படுத்தியுள்ளோம். நாங்கள் தலைமைச் செயலக வேலையைத் தொடங்கியதில் இருந்து சிறியது முதல் மிகப் பெரியது வரை என பல்வேறு சவால்களை எதிர்கொண்டோம். இருப்பினும் எங்கள் பணியில் மிகவும் சிறந்தவற்றை மட்டுமே கொடுக்க வேண்டும் எனக் கடினமாக உழைத்தோம்.
புதிய தலைமைச் செயலக வளாகத்தின் பொறியியல், கட்டிடக்கலை மற்றும் நுணுக்கங்களைப் புரிந்துக்கொள்வதில் நிபுணத்துவம் பெற்றவர் முதல்வர் சந்திரசேகர ராவ். அவரது ஆதரவு மற்றும் சுதந்திரம் இல்லாமல், இந்த அற்புதமான கட்டடத்தை எங்களால் உருவாக்கியிருக்க முடியாது" என தன் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார் பொன்னி. ஒரு பெண் கட்டடக் கலைஞராக, பொன்னி, திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்திலும், அமெரிக்காவிலும் தனது கல்வியை முடித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலச் செயலகத்துக்கான பொன்னியின் வடிவமைப்பு, கட்டிடக்கலையில் அவரது திறமை மற்றும் நிபுணத்துவத்திற்கு ஒரு சான்றாகும். இது தொழில்துறையில் பெண்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். மேலும் ஒரு பெண்ணால் மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் ஒரு நீடித்த கட்டிடத்தை உருவாக்க முடியும் என்பதற்கான அடையாளம்.