தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்பதை எடுத்துரைக்கும் விதமாக மகளிர் மட்டுமே பங்கேற்ற சைக்கிள் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே தொடங்கிய இந்நிகழ்வு, போர் நினைவுச் சின்னம், சென்ட்ரல் ரயில் நிலையம், அமைந்தகரை, நுங்கம்பாக்கம் என 18 இடங்களைக் கடந்து, மீண்டும் காந்தி சிலை அருகிலேயே நிறைவடைந்தது. இரவு 10 மணிக்கு தொடங்கிய CYCLOTHON-ஐ, மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் திஷா மிட்டல், ஐ.ஏ.எஸ். அதிகாரி சினேகா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சுமார் 20 கிலோ மீட்டர் பயண தூரம் கொண்ட இந்த சைக்கிள் அணிவகுப்பினை சென்னை மாநகராட்சியும், காவல்துறையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இதில் பங்கேற்ற 150க்கும் மேற்பட்ட பெண்கள், சென்னை முழுவதும் மேற்கொண்ட இரவு பயணம் மிகுந்த பாதுகாப்பு உணர்வைத் தந்ததாகக் கூறினர்.