எலக்ட்ரிக் பைக்கை சார்ஜ் போட்டதால் ஷோரூமில் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
செகந்திரபாத் ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் ரூபி எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. அங்கு 25 பேருக்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்டவுடனே அவர்களில் சிலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்தும், தீயணைப்பு வீரர்களாலும் மீட்கப்பட்டனர். இந்தத் தீ அருகில் இருந்த உணவகத்திலும் பரவியதால், அங்கு அறையில் தங்கியிருந்த 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில், சென்னையைச் சேர்ந்த சீதாராமன் என்பவரும் உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தீ விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில், GEMOPAI பிராண்டின் சுமார் 35-40 மின்சார வாகனங்கள், சார்ஜிங் அலகுகளுடன் கட்டடத்தின் பாதாள அறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தரை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இ-பைக்குகளை சார்ஜ் ஏற்றி வைத்திருந்ததால், திடீரென வெடித்துச் சிதறியதால், தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசர் சந்தேகிக்கின்றனர்.