இந்தியா

“இறந்துபோனவர் மீது குற்றப்பத்திரிகையா?” - பெலுகான் உறவினர் அதிர்ச்சி 

“இறந்துபோனவர் மீது குற்றப்பத்திரிகையா?” - பெலுகான் உறவினர் அதிர்ச்சி 

rajakannan

பசுக்களை கடத்தியதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்டவர் மீது ராஜஸ்தான் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெலுகான் என்ற பால் வியாபாரி கடந்த 2017 ஆம் ஆண்டு பசுக்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஜெய்ப்பூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அல்வாரில் அவரது வாகனத்தை ஒரு கும்பல் வழிமறித்தது. பசு பாதுகாவலர்கள் எனத் தங்களை கூறிகொண்ட அந்தக் கும்பல் பெலுகானை கடுமையாக தாக்கியது. படுகாயமடைந்த பெலுகான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.

இந்நிலையில், இரண்டு வருடங்களுக்குப் பிறகு பெலுகான் மீது பசுக்களை கடத்தியதாக ராஜஸ்தான் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சம்பவத்தன்று பெலுகான் உடன் இருந்த அவரது மகன்கள் இர்ஷாத் மற்றும் ஆரிஃப் ஆகிய இருவர் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. மேலும், வாகனத்தின் உரிமையாளர் கான் முஹமது என்பவரது பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது. பசுவதைத் தடுப்பு மற்றும் பசுகாப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே, இறந்துபோன தனது தந்தை மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக பெலுகான் மகன்கள் தெரிவித்துள்ளார். தாங்கள் நீதியைதான் எதிர்பார்த்தோம் என்றும் குற்றப்பத்திரிக்கை அல்ல என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பேற்ற சில தினங்களில் இந்தக் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டது. பாஜக அரசு செய்த விசாரணையின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாக தற்போதைய அரசு கூறியுள்ளது.