இந்தியா

கொலிஜியத்தில் குழப்பமா?! தலைமை நீதிபதியின் பரிந்துரையை மூத்த நீதிபதி நிராகரித்ததாக தகவல்!

கொலிஜியத்தில் குழப்பமா?! தலைமை நீதிபதியின் பரிந்துரையை மூத்த நீதிபதி நிராகரித்ததாக தகவல்!

webteam

உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்ய தலைமை நீதிபதி யு.யு.லலித் கடிதம் மூலம் ஒப்புதல் கேட்டதை மூத்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நிராகரித்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் அமைப்பில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் அவருக்கு அடுத்தபடியாக உள்ள 4 மூத்த நீதிபதிகளான டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த கொலிஜியம் அமைப்பின் கூட்டமானது கடந்த செப்டம்பர் 30ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொலிஜியம் அமைப்பில் இடம்பெற்றிருந்த மூத்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அன்றைய தினம் தனது முன்பு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகளை இரவு 9 மணிவரை நீதிமன்றத்தில் அமர்ந்து விசாரணை நடத்தினார். இதனால் அன்றைய தினம் கொலிஜியம் அமைப்பின் கூட்டம் நடைபெறாமல் போனது.

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் இருந்து 4 பேரை தேர்ந்தெடுத்து அந்த பட்டியலை கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள மூத்த 4 நீதிபதிகளுக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் கடிதம் மூலம் அனுப்பி அவர்களது முடிவை கேட்டிருந்தார். இந்திய நீதித்துறை இத்தகைய நடைமுறை இதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை என்பதால் நீதித்துறை வட்டாரமே பரபரப்பானது.

இதற்கிடையே புதிய நீதிபதிகள் பரிந்துரை கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கான காரணம் இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இவ்வாறு கடிதம் மூலம் நீதிபதிகளின் பெயர்களை இறுதி செய்வதை ஏற்க முடியாது என கொலிஜியம் அமைப்பில் இடம்பெற்றுள்ள மூத்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் அப்துல் நசீர் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் அதேவேளையில் மூத்த நீதிபதிகளான எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் இசைவு தெரிவித்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தற்போதை தலைமை நீதிபதி யு யு லலித் தனக்கு பிறகான அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பெயரை இன்னும் பரிந்துரைக்காமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

- நிரஞ்சன் குமார்