இந்திராகாந்தி,ராஜிவ் காந்தி, வாஜ்பாய் twitter
இந்தியா

’1977, 1989, 1998’ - கடந்த காலங்களில் மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய எதிர்க்கட்சி கூட்டணிகள்!

மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், இதற்கு முந்தைய காலங்களில் இந்திய அரசியலை மாற்றிய எதிர்க்கட்சிக் கூட்டணிகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

PT WEB

பாஜகவிற்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமார், இன்று அக்கட்சித் தலைவர்களுடன் இணைந்து (ஜூன் 23) பாட்னாவில் மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டினார். இதில், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, ஆம் ஆத்மி எனப் பல முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம்

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற தலைவர்கள் பாஜக அரசை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

இந்த நிலையில், இந்திய அரசியலில் மாற்றம் ஏற்படுத்திய, அசுரபலத்தில் இருந்த அரசை வீழ்த்திக் காட்டிய எதிர்க்கட்சிகள் குறித்து கட்டுரைத் தொகுப்பை இங்கு காணலாம்.

1975இல், நெருக்கடிநிலையைக் கொண்டுவந்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை எதிர்த்து, ஜனதா கட்சியை எதிர்க்கட்சிகள் தொடங்கின. இதைத்தொடர்ந்து 1977இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், ஆட்சிக்கட்டிலில் இருந்து இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியை ஜனதா கட்சி வீழ்த்தியது. பின், மொரார்ஜி தேசாய் நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார். சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத முதல் அரசுக்கு விதை விதைத்தது ஜெயபிரகாஷ் நாராயணன் ஆவார்.

இந்திரா காந்தி

தொடக்கத்தில், இந்திரா காந்தியை எதிர்த்து அவர் தொடங்கிய பீஹார் இயக்கம்தான், ஜனதா கட்சி உருவானதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. ராஜிவ் காந்தியை ஆட்சியில் இருந்து அகற்ற, தேசிய முன்னணி என்ற கூட்டணியை ஜனதா தளம் கட்சி நிறுவனர் வி.பி.சிங் அமைத்தார். போபர்ஸ் ஊழலை முன்வைத்து அமைக்கப்பட்ட அந்த கூட்டணிக்கு, தெலுங்கு தேசம் கட்சி நிறுவனர் என்.டி.ராமராவ் தலைவராகவும், வி.பி.சிங் அமைப்பாளராகவும் இருந்தனர். இந்தக் கூட்டணி உருவானதற்கு தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி முக்கியக் காரணமாக இருந்துள்ளார்.

1989 இல் ஆட்சியமைத்த தேசிய முன்னணிக்கு பா.ஜ.க.வும், இடது முன்னணியும் ஆதரவு அளித்தன. பிரதமராக வி.பி.சிங் பதவியேற்ற நிலையில், தேசிய முன்னணியின் அரசு ஓராண்டுகூட நீடிக்கவில்லை. உட்கட்சியில் இருந்த அதிகார மோதல்கள், மண்டல் கமிஷனுக்கு எதிரான பா.ஜ.கவின் நிலைப்பாடு, ராமஜென்ம பூமி விவகாரம் ஆகியவற்றால் தேசிய முன்னணி அரசு கவிழ்ந்தது. காங்கிரசுக்கு எதிராக அமைக்கப்பட்ட தேசிய முன்னணி, காங்கிரஸ் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. பிரதமராக சந்திரசேகர் பொறுப்பேற்ற நிலையில், ஏழு மாதங்களில் சந்திரசேகர் ஆட்சியை காங்கிரஸ் கவிழ்த்தது.

Bjp-Congress

இதேபோல்,1998இல் காங்கிரசுக்கு எதிராக, உருவான பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக பதவியேற்ற நிலையில், அதிமுகவின் ஆதரவை இழந்து, ஓராண்டிலேயே ஆட்சி கவிழ்ந்தது. பின், திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன், 1999இல் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. மீண்டும் பிரதமராக வாஜ்பாய் பதவியேற்க, முழுமையான பதவிக்காலத்தை தேசிய ஜனநாயக கூட்டணி நிறைவு செய்தது.

இப்படி பல்வேறு காலகட்டங்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றிவாகை சூடியுள்ள நிலையில், தற்போது மத்தியில் அசுரபலத்துடன் இருக்கும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க செய்து வரும் முயற்சி, பலன் தருமா இல்லையா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.