pm modi, isro pt web
இந்தியா

நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கிய இடத்துக்கு "சிவசக்தி" என பெயர்; பிரதமர் அறிவிப்பு

சந்திரயான் 3 தரையிறங்கிய இடத்துக்கு சிவசக்தி என பெயர் சூட்ட முடிவு என பிரதமர் அறிவிப்பு

Angeshwar G

சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்றார்.

இஸ்ரோவின் தலைவர் சோம்நாத், சந்திரயான் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்ட சந்திரயானியின் முதன்மை விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்களை பிரதமர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

சந்திரயான் 3 லாண்டர் ரோவர் உள்ளிட்ட கருவிகளின் மாதிரிகளை பிரதமருக்கு இஸ்ரோ தலைவர் சோமநாத் விளக்கினார். லாண்டர், ரோவர் எடுத்த புகைப்படங்களையும் நிலவின் தென்பகுதியில் விண்கலம் எங்கு உள்ளது என்பது குறித்த புகைப்படங்களையும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பிரதமர், மோடிக்கு வழங்கினார். சந்திரயான் லாண்டரின் சிறிய மாதிரி வடிவத்தை பிரதமர் மோடிக்கு வீர முத்துவேல் மற்றும் சோம்நாத் பரிசாக வழங்கினர்.

உங்கள் அனைவரையும் சந்திக்க மிகவும் ஆவலாக இருந்தேன்' என விஞ்ஞானிகளிடம் தெரிவித்த பிரதமர் மோடி “நிலவில் சந்திரயான் தரை இறங்கிய இடத்துக்கு "சிவசக்தி" என பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளது:” என பிரதமர் மோடி அறிவித்தார்.

அத்துடன், சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23ம் நாள் இனி "தேசிய விண்வெளி தினம்" ஆக கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களுடைய கடும் உழைப்பால் மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளனர் எனவும் இந்திய விண்வெளித் துறை வருங்காலத்தில் மிகவும் வேகமான வளர்ச்சி பெறும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். “பாரத் மாதா கி ஜெய்” என முழக்கமிட்டு தனது உரையை பிரதமர் மோடி நிறைவு செய்துள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள தென் ஆப்பிரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துடன் இணையவழியில் கலந்து கொண்டார். விண்ணில் வெற்றிகரமாக சந்திரயான் 3 தரையிறங்கியதும் பிரதமர் மோடி உரையாற்றினார். தொடர்ந்து தனது அடுத்தடுத்த சுற்றுப்பயணங்களை முடித்துக் கொண்டு இந்தியா வந்த பிரதமர் டெல்லிக்கு செல்லாமல் நேராக பெங்களூர் வந்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.