இந்தியா

துர்கா பூஜையில் இடம்பெற்ற சந்திரயான்2 மாதிரிகள்!

துர்கா பூஜையில் இடம்பெற்ற சந்திரயான்2 மாதிரிகள்!

webteam

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் நடைபெற்ற துர்கா பூஜையில் சந்திரயான்2 தொடர்பான மாதிரிகள் அமைக்கப்பட்டன.

டெல்லி, மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் துர்கா பூஜை களைகட்டியுள்ளது. மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் செட்லா அகரானி கிளப் சார்பில் இடம்பெற்றுள்ள துர்கா பூஜைப் பந்தல் பழைய தபால் பெட்டிகள், டைப்ரைட்டர்கள், ராந்தல் விளக்குகள், தொலைபேசிகள், வானொலி பெட்டிகள், கிராமஃபோன் மற்றும் கடிகாரங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் சப்தர்ஜங் பகுதியில் இடம்பெற்றுள்ள துர்கா பூஜை பந்தலில் சிங்க வாகனத்தில் காட்சி தரும் துர்கைக்கு வழிபாடு நடந்தது. பந்தலில் ஏராளமான பக்தர்கள் வாத்தியங்களை இசைத்து ஆடிப்பாடி பக்திப் பரவத்தில் ஆழ்ந்தனர். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் துர்கா பூஜைக்கு பிரமாண்டமான கலை அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. மாளிகை போன்ற செட்கள் போடப்பட்டு ஒளியூட்டப்பட்டுள்ளன. வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் பந்தலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பலரும் வாத்தியக் கருவிகளை இசைத்து துர்க்கையை வழிபட்டனர்

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் நடைபெற்ற துர்கா பூஜையில் சந்திரயான்2 தொடர்பான மாதிரிகள் அமைக்கப்பட்டன. ராக்கெட், விண்வெளி வீரர்கள் இஸ்ரோ தலைவர் சிவன் ஆகியோரின் மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன. இது குறித்து கருத்து தெரிவித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், இஸ்ரோவின் ஆளில்லா விண்வெளி பயணத்தை சித்தரிக்க நாங்கள் விரும்பினோம். விண்வெளி வீரர்களின் மாதிரிகளையும் நிறுவியுள்ளோம் என தெரிவித்தார்.