இந்தியா

ஜூலை 15-ல் ஏவப்படுகிறது சந்திராயன்-2 - இஸ்ரோ தலைவர் சிவன்

ஜூலை 15-ல் ஏவப்படுகிறது சந்திராயன்-2 - இஸ்ரோ தலைவர் சிவன்

webteam

உலகிலேயே முதன்முறையாக நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்யும் வகையில், இந்தியாவின் சந்திராயன்-2 விண்கலம் வரும் ஜூலை 15-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திராயன்-2 விண்கலம், அடுத்த மாதம் 9-ம் தேதிமுதல் 16-ம் தேதிக்குள் ஏவப்படும் எனக் கூறப்பட்டுவந்த நிலையில், 15-ம் தேதி அனுப்பப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இருள் சூழ்ந்தும், கரடு முரடாகவும் காணப்படும் நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்படுகிறது. 

முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட சந்திராயன்-2 விண்கலம், ஜி.எஸ்.எல்.வி எம்.கே-3 ராக்கெட் மூ‌லம் ஏவப்படுகிறது. சந்திராயன்-2 விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர் விக்ரம், ஆய்வூர்தி பிரக்யா ரோவர் ஆகிய அதிநவீன சாதனங்களையும் எடுத்துச் செல்கிறது. 

சாஃப்ட் லேண்டிங் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில், இந்த விண்கலம் தரையிறங்கும் என்றும், தரையிறங்கிய 15 நிமிடங்களில், நிலவின் தென்துருவ பகுதிகளின் புகைப்படங்கள் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைக்கும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் முதலில் தரையிறங்கிய நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்க உள்ளது.