இந்தியா

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப் போவதில்லை- மாநில பாஜக அறிவிப்பு

webteam

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப் போவதில்லை என மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் தெரிவித்துள்ளார். 

288 தொகுதிகளை கொண்டுள்ள மகாராஷ்டிரா தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை. ஆனால், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசமயம் கூட்டணி கட்சிகளான பாஜக மற்றும் சிவசேனா இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும் அரசியல் மோதல் ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து தனது முதலமைச்சர் பதவியை தேவேந்திர ஃபட்னாவிஸ் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியுள்ள கட்சி என்பதால், பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். 

இதனால் இன்று மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியுடன் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்திப்பு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப் போவதில்லை எனத் தெரிவித்தார். மேலும் சிவசேனாவுடன் இணைந்து பணியாற்ற மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல் காங்கிரஸ்-என்சிபியுடன் சிவசேனா ஆட்சியமைத்தால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்தார்.