உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான சந்திரசூட் - பிரதமர் மோடி PT Web
இந்தியா

விநாயகர் சதுர்த்தி விழா: பிரதமர் வந்தது ஏன்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான சந்திரசூட், கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தனது இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி பூஜையை ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டது, பல்வேறு விவாதங்களை எழுப்பியது.

ஜெனிட்டா ரோஸ்லின்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தனது இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி பூஜையை ஏற்பாடு செய்திருந்தார். அதில், பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலான நிலையில், பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில்தான், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று விளக்கம் தெரிவித்துள்ளார். அதில், “நீதிபதிகளின் இல்லங்களில் நடைபெறும் விழாக்களில் அரசியல் தலைவர்கள் பங்கேற்பது வழக்கமான ஒன்றுதான். அதேநேரம், அதுபோன்ற தருணங்களில் நீதித்துறை தொடர்பான கருத்துக்கள் ஒருபோதும் பேசப்படாது. ஜனநாயக ஆட்சி அமைப்பில் எங்களின் கடமைகள் எங்களுக்குத் தெரியும். மேலும் அரசியல் நிர்வாகத்திற்கும் அவர்களது கடமை என்னவென்று தெரியும். அவர்களும் முதிர்ச்சியுடன் செயல்படுவார்கள்.

ஆனால், இது போன்ற நிகழ்வுகளில் சட்டத்திற்கு அப்பாற்பட்டு ஒப்பந்தங்கள் செய்யப்படுவதாக மக்கள் நினைக்கிறார்கள். அவ்வாறு ஏதும் இல்லை. இப்படியான நிகழ்வென்பது, வலுவான உரையாடலின் ஒரு பகுதி மட்டுமே.

மூன்று கரங்களின் பணியும் ஒரே குறிக்கோளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த செயல்முறையை நாம் நம்பும் வரை, தொடர்ந்து உரையாடல் இருக்க வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் அவர்.