இந்தியா

"விரைவில் மோடி முன்னாள் பிரதமர் ஆவார்" - சந்திரபாபு நாயுடு

"விரைவில் மோடி முன்னாள் பிரதமர் ஆவார்" - சந்திரபாபு நாயுடு

webteam

பிரதமர் மோடி இன்னும் சில வாரங்களில் முன்னாள் பிரதமராகிவிடுவார் என ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

சர்வாதிகாரத்தை அகற்றுவோம், ஜனநாயகத்தை காப்போம் என்ற தலைப்பில் ஆம் ஆத்மி கட்சி சார்பில், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், நாடே பாஜகவை அகற்ற முடிவெடுத்துவிட்டதால், மோடி இன்னும் சிலவாரங்களில் முன்னாள் பிரதமர் ஆகிவிடுவார் என்றார்.

இது தான் நமக்கு கடைசி தேர்தல் என்ற சந்திரபாபு நாயுடு, இதை விட்டுவிட்டால் பிறகு தேர்தல் என்பதே நாட்டில் வராது என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவே இல்லாமல் போய்விடும் என்றார். தேசிய அளவில் நாட்டைக் காக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராகிவிட்டதாக தெரிவித்த மம்தா, இதற்காக அனைவரும் தயாராக வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதில் பங்கேற்று பேசிய திமுக எம்.பி. கனிமொழி, நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் மாண்பை கெடுத்துவிட்டது என்றார். எதிர்க்கட்சிகள் அமைக்கும் மகா கூட்டணி, அவர்களை ஆட்சியிலிருந்து அகற்றும் என்றார். 

இந்த கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் மத்திய அமைச்சர்கள் பாரூக் அப்துல்லா, சரத் யாதவ், சரத் பவார், எம்.பி. சத்துருகன் சின்ஹா, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.