ஆந்திர மாநில முதலமைச்சராக 4ஆவது முறையாக சந்திரபாபு நாயுடு அண்மையில் பதவியேற்றார். வேட்பு மனு தாக்கல், பரப்புரை, சான்றிதழ் வாங்க என எதற்கும் குப்பம் தொகுதிக்கு நேரில் செல்லாத சந்திரபாபு நாயுடு, அங்கு நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்றார்.
இதற்காக குப்பம் சென்ற அவருக்கு தொகுதி மக்கள் மற்றும் தொண்டர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் சிலைக்கு அவர் மாலை அணிவித்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு உரையாற்றினார். அப்போது மழை குறுக்கிட்ட நிலையில் “எனக்காக 2 நிமிடம் காத்திருக்க முடியுமா?” என சந்திரபாபு நாயுடு கேட்க, கொட்டும் மழையில் உற்சாக குரல் எழுப்பி மக்கள் அன்பு மழை பொழிந்தனர்.
இதனை தொடர்ந்து பேசிய சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ஆட்சியை கடுமையாக சாடினார். மாநில பொருளாதார நிலை, போலாவரம் திட்டம், மதுபானம் உள்ளிட்ட 7 தலைப்புகளில் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளதாக கூறினார். பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே தடுப்பணைகள் இருந்தாலும், சாத்தியம் உள்ள இடங்களில் மேலும் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.