இந்தியா

“என்னுடன் விவாதம் நடத்த தயாரா?” - பிரதமருக்கு ஆந்திர முதல்வர் சவால்

“என்னுடன் விவாதம் நடத்த தயாரா?” - பிரதமருக்கு ஆந்திர முதல்வர் சவால்

webteam

பாஜக ஆட்சியில் நாட்டுக்கு என்ன நன்மை கிடைத்தது என தன்னுடன் விவாதம் நடத்த தயாரா என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சவால் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடியின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்த சந்திரபாபு நாயுடு, மோடியின் ஆட்சியில் எட்டப்பட்ட பொருளாதார வளர்ச்சி சதவீதம் என்ன என கேள்வி எழுப்பினார். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் கிடைத்த வளர்ச்சி என்ன என்றும் அவர் வினவினார். இந்த நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதார முறை நிலைகுலைந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து விவாதம் நடத்த தயாரா என பிரதமர் மோடிக்கு அவர் சவால் விடுத்தார்.

நேற்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் பேசிய பிரதமர் மோடி, 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த மோடி, அத்தேர்தல் மக்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயான மோதலாக இருக்கும் என பதிலளித்திருந்தார். மக்களின் நலனுக்காகவே செயல்பட்டுவரும் தமது பணி திருப்திகரமாக இருந்ததா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் முடிவை மக்களிடமே விட்டுவிட்டதாகவும் கூறியிருந்தார். தமது பணிக்கு இந்திய நாட்டு மக்கள் நல்ல முடிவை தருவர் என தாம் நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை எனக்கூறி பாஜக கூட்டணியிலிருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்க தேசம் கட்சி கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியேறியது. இதன் பின்னர், பாஜகவிற்கு எதிரான கருத்துக்களை சந்திரபாபு நாயுடு தெரிவித்து வருகிறார். அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் கூட, காங்கிரஸுடன் தெலங்கனாவில் கூட்டணி அமைத்தார். அத்துடன் பாஜகவிற்கு எதிராக நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி தொடர்பாக பல அரசியல் தலைவர்களை சந்தித்திருந்தார்.