இந்தியா

தெலுங்கு தேசம் வேட்பாளர்கள் வீடுகளில் சோதனை: சந்திரபாபு நாயுடு தர்ணா!

தெலுங்கு தேசம் வேட்பாளர்கள் வீடுகளில் சோதனை: சந்திரபாபு நாயுடு தர்ணா!

webteam

ஆந்திராவில் தெலுங்கு தேசம் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்க இருக்கிறது. இதற்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கர்நாடகா, தமிழகம், ஆந்திரா மாநிலங்களில் வேட்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எதிர்க்கட்சிகளை மட்டுமே குறி வைத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக அவர்கள் புகார் கூறிவருகின்றன. கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, ‘வருமான வரித்துறையும் தேர்தல் கமிஷனும் சோதனை என்ற பெயரில் என்னையும் என் குடும்பத்தையும் துன்புறுத்துகிறது’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று வருமான வரி சோதனை நடை பெற்றன. இதையடுத்து, தங்கள் கட்சியை மட்டும் குறி வைத்து இந்த சோதனை நடைபெறுவதாகக் கூறி, விஜயவாடாவில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அந்தக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

பின்னர் அவர் கூறும்போது, ’பிரதமர் மோடியின் உத்தரவால் இந்த சோதனை நடைபெறுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி நடக்க வேண்டும். அனைத்து கட்சியையும் ஒன்றாகத்தான் அவர்கள் பார்க்க வேண்டும். ஒரு கட்சிக்கு ஆதரவாகவும் பிற கட்சிகளுக்கு எதிராகவும் செயல்படக் கூடாது’’ என்றார்.