பிரதமர் மோடி  Facebook
இந்தியா

'முக்கிய கேபினேட் இலாக்காக்கள், சபாநாயகர் பதவி'..பாஜகவுக்கு சந்திரபாபு, நிதிஷ் வைக்கும் நிபந்தனைகள்!

Prakash J

18வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பெருத்த எதிர்பார்ப்புகளைத் தவிடுபொடியாக்கி இருக்கிறது. எனினும் பாஜக, தமது கூட்டணியுடன் ஆட்சியமைப்பதற்கான நிலையை அக்கட்சி எட்டியுள்ளது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.

பிரதமர் மோடி

ஆயினும் மத்தியில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் கிடைக்கப்பெறாத நிலையில், பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க இருக்கிறது. அந்தவகையில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. இவர்களின் பச்சைக்கொடியுடன், பாஜக மீண்டும் 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்க இருக்கிறது. பிரதமராக மோடி ஜூன் 8ஆம் தேதி பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீர் | சிறையில் இருந்தபடியே Ex முதல்வரை வீழ்த்திய சுயேட்சை வேட்பாளர்... யார் இந்த ரஷீத்?

இந்த நிலையில், மத்தியில் ஆட்சியமைக்க தனிப் பெரும்பான்மையை பாஜக கைப்பற்றாத நிலையில், கூட்டணியின் ஆதரவைப் பெற்றுள்ளது. அவர்களும் ஆதரவுக் கரம் நீட்டியிருப்பதுடன், அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அக்கூட்டணிக் கட்சிகள் சில நிபந்தனைகளை பாஜகவிடம் விதித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சந்திரபாபு நாயுடு 10 மத்திய அமைச்சர் பதவிகளுடன் ஒரு சபாநாயகர் பதவியையும் கோரியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதுபோல் நிதிஷ்குமார் 3 மத்திய அமைச்சர்கள் பதவியுடன் 2 இணையமைச்சர்கள் பதவியையும் கோரியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர்களைத் தவிர மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே ஒன்றுக்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர் பதவியுடன் 2 இணையமைச்சர் பதவிகளையும், லோக் ஜனதா தளம் 1 மத்திய அமைச்சருடன், 1 இணையமைச்சர் பதவியையும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்சா 1 மத்திய அமைச்சர் பதவியையும் கேட்டிருப்பதாகவும், இதனால் மோடி மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: அடேங்கப்பா..! இத்தனை மத்திய அமைச்சர்கள் மக்களவை தேர்தலில் தோல்வியா? ஷாக் கொடுக்கும் முடிவுகள்!