viral video twitter
இந்தியா

என்னது! டீசல் பரோட்டா? வைரலான வீடியோ; குவிந்த கண்டனங்கள்! மன்னிப்பு கேட்ட மாஸ்டர்.. நடந்தது என்ன?

Prakash J

பலருக்கும் பிடித்த உணவுகளில் பரோட்டாவும் ஒன்றாக உள்ளது. பரோட்டா உடலுக்குக் கேடு என பல தரப்பினரும் அறிவுறுத்தினாலும் அதைத் தொடர்ந்து சாப்பிடுவர்கள் நாட்டில் பலர் இருக்கின்றனர். அப்படியான பரோட்டாக்கள் கொத்து புரோட்டா, வீச் புரோட்டா, முட்டை வீச் புரோட்டா, லாப்பா புரோட்டா, முட்டை லாப்பா புரோட்டா, சிக்கன் லாப்பா புரோட்டா, சில்லி புரோட்டா பலவிதமான வகைகளில் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில், பரோட்டாவை எண்ணெய்க்குப் பதில் டீசலில் தயாரிக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது.

அந்த வீடியோவில், பரோட்டாவைத் தயாரிக்க இருக்கும் ஒருவர், தவாவின் மீது டீசலை அளவே இல்லாமல் ஊற்றுகிறார். பின்னர், பரோட்டாவை அந்த டீசலில் நன்றாக வேகவைத்து எடுக்கிறார். இந்த வீடியோ சண்டிகரின் ஒரு தெருக்கடையில் எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். என்னடா இப்படி போயிட்டீங்க என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ வைரலான நிலையில், இந்த பரோட்டாக்கள் தினமும் 300 பேருக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து இந்திய உணவு ஒழுங்குமுறை ஆணையமான FSSAI விசாரணையைத் தொடங்க வேண்டும் என கருத்துகளைப் பதிவிட்டனர்.

இதையும் படிக்க: சென்னை மெட்ரோ இரண்டாம்கட்ட திட்டம்|ஒரு ரூபாய்கூட தராத மத்திய அரசு.. ஆர்.டி.ஐ. மூலம் வெளியான தகவல்!

இதையடுத்து, அந்த தெருக்கடை தரப்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளது. அதில், ”நாங்கள் 'டீசல் பராட்டாவை' எப்போதும் தயாரிப்பதில்லை. தவிர, வாடிக்கையாளர்களுக்கு இதையும் வழங்குவதுமில்லை. பிளாக்கர் ஒருவரால் வேடிக்கைக்காக எடுக்கப்பட்ட அந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.

நாங்கள் இங்கு வாடிக்கையாளர்களுக்குச் சுகாதாரமான முறையில் மட்டுமே உணவை வழங்கிவருகிறோம். அந்த வகையில் சமையல் எண்ணெய்யை மட்டுமே பயன்படுத்துகிறோம். முக்கியமாக, நாங்கள் மக்களின் உயிரோடு விளையாடுவதில்லை” எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அந்த பரோட்டாவைத் தயாரித்த அமன்பிரீத் சிங் என்பவரும் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அந்த பரோட்டாக்கள் டீசலில் சமைக்கப்படவில்லை. சமையல் எண்ணெய்யில் தயார் செய்யப்பட்டவை. இந்த வீடியோ சண்டிகரின் மக்களைப் பாதித்துள்ளது. அது ஏற்படுத்திய தாக்கத்தை நினைத்து வருந்துகிறேன். அதற்காக எனது மன்னைப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சைவ உணவுக்கு பதில் சிக்கன் பிரியாணி டெலிவரி.. வருத்தப்பட்ட நபர்.. பதிலளித்த ஜொமாட்டோ.. #Viralvideo