சண்டிகர் மேயர் தேர்தல், உச்ச நீதிமன்றம் ட்விட்டர்
இந்தியா

”சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம்” - உச்ச நீதிமன்றம் கண்டனம்

”சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம்” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

Prakash J

பஞ்சாப் மற்றும் ஹரியான மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் நகரின் மாநகராட்சி மேயர் தேர்தல், கடந்த ஜனவரி 30ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் சார்பில் மேயர் பதவிக்கு குல்தீப் சிங் நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் மனோஜ் சோங்கர் போட்டியிட்டார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் 36 மொத்த வாக்குகளும் பதிவாகின. இதில் மனோஜ் சோங்கருக்கு 16 வாக்குகளும், குல்தீப் சிங்கிற்கு 12 வாக்குகளும் கிடைத்தன. எஞ்சிய I-N-D-I-A கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன. இதன்மூலம் பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாஜகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே 8 வாக்குகள் செல்லாது என்று தேர்தல் அதிகாரி அறிவித்ததாகவும், அவர் உள்நோக்கத்துடன் செயல்பட்டிருக்கிறார் எனவும் குற்றச்சாட்டுகளை வைத்தது அக்கூட்டணி.

சண்டிகர் மாநகராட்சியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கவுன்சிலர்கள் 20 பேர் உள்ளனர். பாஜகவிற்கு 15 பேர்தான் உள்ளனர். சிரோன்மணி அகாலி தளத்திற்கு 1 கவுன்சிலர் இருக்கிறார். எனவே செல்லாது என்று அறிவிக்கப்பட்ட வாக்குகள் அனைத்தும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினரின் வாக்குகள். ஆகையால் திட்டமிட்டு மோசடி நடந்துள்ளது என அக்கூட்டணி கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அன்றைய தினம் வாக்குச் சீட்டில் நடைபெற்ற மோசடி குறித்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சிக்குள்ளாக்கின. 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் சார்பில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம், 3 வாரத்திற்குப் பின் விசாரணையை ஒத்திவைத்தது. இதை எதிர்த்து ஆம் ஆத்மி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ”சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம்” எனத் தெரிவித்தார். மேலும் அவர், “ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயலாகத்தான் நான் இதனை பார்க்கிறேன். தேர்தல் நடத்தும் அதிகாரி சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டுகளைச் சிதைத்துள்ளார் என்பது அந்த வீடியோவில் வெளிப்படையாகவே தெரிகிறது. அவர் இப்படியா தேர்தலை நடத்துவது? நிச்சயமாக அந்த நபர் விசாரிக்கப்பட வேண்டும்.

செல்லாத வாக்குகளாகவே இருந்தாலும் அதில் எந்த ஒரு திருத்தத்தையும் தேர்தல் நடத்தும் அதிகாரி மேற்கொள்ளக்கூடாது. ஆனால் இது எல்லாம் தேர்தல் நடத்தும் அதிகாரிக்குத் தெரியாதா? இவற்றை எல்லாம் உச்சநீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று அந்த தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சொல்லுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற இருந்த சண்டிகர் மேயர் கூட்டத்திற்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதையும் படிக்க: 45 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாதனை படைத்த அஸ்வின்; ஏமாற்றிய DRS முடிவால் தள்ளிப்போன மற்றொரு சாதனை!!