கார்கே, ஃபரூக் அப்துல்லா, ராகுல் காந்தி, பிரதமர் மோடி pt web
இந்தியா

சுயேட்சைகள் ஆதிக்கம் அதிகம்.. தொங்கு சட்டசபைக்கே வாய்ப்பு.. ஜம்மு காஷ்மீர் களநிலவரம் என்ன?

பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு முதல் முதலாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் நாளைய வாக்கு எண்ணிக்கையில் யாருக்கு வெற்றி கிடைக்கப் போகிறது என்பது தெரியவரும்.

நிரஞ்சன் குமார்

கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. 2014 ஆம் ஆண்டு ஐந்து கட்டங்களாக மொத்தம் உள்ள 87 தொகுதிகளுக்கு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது உயிருடன் இருந்த முன்னாள் முதல்வர் முப்தி முகமது சையதின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களை கைப்பற்றி அதிக இடங்களை வென்றிருந்தது. அதற்கு அடுத்தபடியாக பாரதிய ஜனதா கட்சி 25 இடங்களை கைப்பற்றி இருந்தது.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்

தேசிய மாநாட்டு கட்சி வெறும் 15 இடங்களை மட்டுமே பெற்று இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சி பன்னிரண்டு இடங்களை மட்டுமே பெற முடிந்தது. ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி இரண்டு இடங்களை பிடித்திருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 8 நாட்களுக்கு மேலாகியும் யாரும் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகவில்லை. இறுதியாக ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாரதிய ஜனதா ஆகியவை அதிகாரப்பூர்வமாக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கியது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற ஒப்பந்தத்துடன் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டு முப்தி முகமது சையத் முதல்வராக பொறுப்பேற்றார்.

பிறகு அவரது மறைவு மெகபூபா முக்தி கட்சியின் தலைவர் ஆனது, கூட்டணியில் விரிசல், பிரிவு 370 ரத்து என அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து தற்போது பாரதிய ஜனதா கட்சி மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் 62 இடங்களில் தனித்து களம் காண்கின்றது. அதேபோல கடந்த முறை கூட்டணி ஆட்சியில் முன்னிலை பெற்றிருந்த ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 81 இடங்களில் தனியாக போட்டியிடுகின்றது.

கார்கே, ஃபரூக் அப்துல்லா, ராகுல் காந்தி, பிரதமர் மோடி

மற்றொரு பக்கம் INDIA கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இவை தவிர பகுஜன் சமாஜ் கட்சி, குலாம் நபி ஆசாத்தின் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

சுயேச்சைகள் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பதால் இந்த முறையும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டப்பேரவையே அமையும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியிருக்கின்றன. எனவே வாக்கு எண்ணிக்கைக்கு பிறகான கூட்டணிகளில் மாற்றம் என்பது தவிர்க்க முடியாததாகவே பார்க்கப்படுகிறது.