ஒரு ரூபாய் வருமானம் வந்தால் 9 ரூபாய்க்கான செலவுகள் காத்திருக்கிறது என்பது சாமானிய குடும்பத்தலைவரின் புலம்பலாக இருக்கும். இதே நிலைதான் அரசுக்கும். டிவிடென்ட் என்ற வகையில் ரிசர்வ் வங்கி ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை அரசுக்கு தரும் என மதிப்பிட்டிருந்த நிலையில் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் அள்ளித் தந்துள்ளது. நேரடி வரி வருவாய் 20% அதிகரித்து 5 லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாயை தொட்டுள்ளது. ஆனால் வருமானம் அதிகரித்துவிட்டதே என ஆனந்தப்படும் நிலையில் அரசு இல்லை. பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரிச்சலுகைகளில் இருந்து பல்வேறு தொழில் துறையினர் வரை தங்களுக்கு என்னென்ன சலுகைகள் தேவை என்று அளித்த பட்டியல் நிதியமைச்சர் முன் குவிந்து கிடக்கிறது.
இது தவிர தற்போது கூட்டணி அரசு என்பதால் ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கும் தத்தமது மாநிலங்களுக்கு கூடுதல் நிதியுதவியாக கோரியுள்ளதாக தெரிகிறது. மாநில அரசுகளே நிதி கோரும் போது மத்திய தர மக்களுக்கு பிரச்னைகள் இருக்காதா என்ன.
அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் விலையிலிருந்து மின்கட்டணம், செல்போன் கட்டணம் வரை விலைவாசி மேலே மேலே பறந்து கொண்டே உள்ளது. பணவீக்க புள்ளிவிவரங்கள் நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகின்றன. உணவுப்பொருள் விலைவாசி அதிகமாக இருப்பதாக ரிசர்வ் வங்கியே வெளிப்படையாக தெரிவித்துள்ளது. இன்னொரு புறம் வேலைவாய்ப்பின்மை வீதம் 9.2 சதவீதத்தை தொட்டுவிட்டதாகவும் இதற்கு ஏதேனும் தீர்வு கண்டாக வேண்டும் என்றும் சிஎம்ஐஇ அமைப்பு தெரிவித்துள்ளது.
இப்படி அணிவகுக்கும் இன்றைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது மட்டுமல்ல... எதிர்கால வளர்ச்சிக்கும் பாதை அமைக்கும் கடமை அரசுக்கு உள்ளது. சாலைகள், மின்சாரம், குடிநீர், ரயில்வே, சுகாதாரம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் பல லட்சம் கோடி ரூபாய்களை செலவிட வேண்டியுள்ளது. ஆனால் தாராளமாக செலவுகளை செய்ய முடியாத அளவுக்கு அரசின் கடன் உள்ளது. அது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் 80 சதவீதத்தை கடந்து விட்டது. இத்தனைக்கும் இடையில் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளியான நிதிப்பற்றாக்குறையை 5 சதவீதத்திற்குள் கொண்டு வந்தாக வேண்டிய நெருக்கடியும் உள்ளது.
இப்படி வரவு எட்டணா செலவு பத்தணா சூழ்நிலையில் உள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சவால்களுக்கு எப்படி தீர்வு தரப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது