இந்தியா

வேளாண் சட்டங்கள் விவகாரம்: நீதிமன்றத்தின் முடிவுக்கு விட அரசு திட்டம்

வேளாண் சட்டங்கள் விவகாரம்: நீதிமன்றத்தின் முடிவுக்கு விட அரசு திட்டம்

Sinekadhara

விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு விட மத்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளின் தொடர் போராட்டம் 47 ஆவது நாளை எட்டியுள்ளது. டெல்லி புராரி மைதானம், டெல்லி-உத்தரப்பிரதேசம் எல்லை காஜிப்பூர், திக்ரி, சிங்கு, ஷாஜகான்பூர் உள்ளிட்ட பல இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

விவசாயிகளுடன் மத்திய அரசு 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. எனினும் இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. கடைசியாக கடந்த வெள்ளியன்று நடந்த பேச்சுவார்த்தையின்போது கூட, சட்டங்களை வாபஸ் பெறும் எண்ணம் அரசுக்கு இல்லையென வேளாண்துறை அமைச்சர் நரேந்திர தோமர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இருந்தபோதிலும், வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தை உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு விட அவர் விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. நீதிமன்றம் உங்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கினால், போராட்டம் நடத்தத் தேவையிருக்காது என விவசாயிகளிடம் அமைச்சர் கூறியதாக தெரியவருகிறது.

மேலும், உச்சநீதிமன்றத்தின் கருத்தை பொறுத்தே மத்திய அரசுடன் 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது குறித்து விவசாயிகள் முடிவெடுக்கவுள்ளதாகவும் கூறியிருக்கின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் தொடர்ந்துள்ள மனு, உச்சநீதிமன்றத்தில் வரும் 11ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.